search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-15)
    X

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-15)

    • புனித ரமலானில் உம்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.
    • உம்ராவை எத்தனை தடவை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம்.

    புனித ரமலானில் உம்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

    புனித ரமலான் மாதம் நோன்புக்கானது (மாதம்) மட்டுமல்ல. நோன்புக்கும் உரியது. நோன்பு அல்லாத பிற வழிபாட்டுக்கும் ஏற்றமானது. புனித ரமலானில் உயர்வான, முதன்மையான வழிபாடு நோன்பாகும். நோன்பை விடுத்து இன்னும் ஏராளமான வழிபாடுகள் புனித ரமலானில் நிரம்பி வழிகின்றன. நிறைவேற்றப்படவும் செய்கின்றன. அவற்றில் நோன்புக்கு அடுத்த அந்தஸ்தில் இடம் பெறுவது புனிதரமலானில் புனித கஅபா ஆலயம் சென்று, அதை தரிசனம் செய்து (உம்ரா செய்து) வருவதாகும்.

    உம்ரா செய்வது என்றால், அதற்கென்று தனி மாதங்களோ, தனி காலங்களோ கிடையாது. ஆண்டு முழுவதும் புனித கஅபா ஆலயம் சென்று தரிசனம் செய்து வரலாம். ஆனால், இவ்வாறு ஹஜ் செய்யமுடியாது. ஹஜ் செய்வ தற்கென்று சில குறிப்பிட்ட மாதங்கள் உண்டு. அவை, ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களாகும். இம்மூன்று மாதங்களை தவிர்த்து வேறுமாதங்களில் ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாது. எனினும், உம்ராவை நிறைவேற்ற முடியும்.

    உம்ரா செய்ய ஒருவர் நாடினால், அவர் முதலில் தைக்கப்படாத இரண்டு ஆடைகளை அணிந்து புனித கஅபாவில் நுழைய வேண்டும். (இதற்கு இஹ்ராம் ஆடை என்று பெயர்), புனித கஅபாவில் நுழைந்ததும் 7 சுற்றுக்கள் சுற்றி வர வேண்டும், ஸபாவில் ஆரம்பித்து - மர்வா ஆகிய இரண்டு குன்றுகளுக்கு மத்தியில் ஏழு தடவை விரைந்தோட வேண்டும். தலைமுடியை அகற்ற வேண்டும். இவ்வாறு செய்வதுதான் உம்ரா ஆகும்.

    உம்ராவை எத்தனை தடவை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஆனால் புனித ஹஜ் என்பது வாழ்க்கையில் ஒரு தடவைதான் கடமை. புனித ஹஜ்ஜை ஒரு தடவை மட்டும் நிறைவேற்றினால் போதும். உம்ராவை பல தடவை நிறைவேற்றலாம். இதுதான் நபி வழி.

    கதாதா (ரஹ்) அறிவித்தார். 'நபி (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்தார்கள்? என நான் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அவர், 'நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவை: ஹூதைபிய்யா எனுமிடத்தில் துல்க அதா மாதத்தில், இணை வைப்போர் தடுத்த போது செய்யச் சென்றது. இணைவைப்பருடன் செய்த சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது. 'ஜிஇர்ரானா' என்ற இடத்திலிருந்து ஒரு போரில் (அது ஹூனைன் போர் என்று கருதுகிறேன்) வெற்றி கொள்ளப்பட்ட பொருட்களை பங்கிட்ட பொழுது செய்தது.

    நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜில் அடங்கியிருந்த உம்ராவையும் சேர்த்து நான்கு உம்ராக்களாகும்' என்றார். பிறகு 'எத்தனை ஹஜ் செய்தார்கள்?" என்று கேட்டதற்கு 'ஒரு ஹஜ் தான், என்றார்கள்.' (நூல்:புகாரி)

    உம்ராவை எந்த மாதத்திலும் நிறைவேற்றலாம். எனினும், புனித ரமலான் மாதத்தில் உம்ராவை நிறைவேற்றுவது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும். 'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகராகும்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    ஹஜ் வேறு வணக்கம். உம்ரா வேறு வணக்கம். உம்ரா செய்வதினால் மட்டுமே ஹஜ் கடமை நீங்கிவிடாது. எனினும், ரமலானில் உம்ரா செய்தால், ஹஜ் செய்வதால் எந்த நன்மை கிடைக்குமோ அதே நன்மை கிடைக்கும். 'ஓர் உம்ராச் செய்வது, மறு உம்ரா வரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச்செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜூக்குச் சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' (அறிவிப்பாளர்: ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) அபூஹரைரா (ரலி ), நூல் :முஸ்லிம்

    Next Story
    ×