search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆறு மாதங்களில் புதிய காங்கிரசை பார்ப்பீர்கள்: ராகுல்காந்தி
    X

    ஆறு மாதங்களில் புதிய காங்கிரசை பார்ப்பீர்கள்: ராகுல்காந்தி

    காங்கிரஸ் கட்சியில் அடுத்த 6 மாதங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படும் எனவும் அமைப்பு ரீதியில் பல்வேறு அதிரடியாக மாற்றங்கள் செய்யப்படும் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
    பக்ரைன்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பக்ரைனில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் அங்கு நடந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    பாரதிய ஜனதா அரசு எல்லா வகையிலும் தோல்வியை சந்தித்து உள்ளது. நாட்டில் வேலை வாய்ப்பின்மை மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதற்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதற்கு பதிலாக மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் பாரதிய ஜனதா ஈடுபட்டுள்ளது. மக்கள் மத்தியில் கலவரத்தையும் தூண்டுகிறது. ஜாதி ரீதியாக, மத ரீதியாக மக்களை பிரித்து அதன் மூலம் ஆதாயம் தேட பார்க்கிறது.

    இப்போது நாடு அமைதியாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கலாம். ஆனால் பாரதிய ஜனதா கட்சி பல்வேறு சிக்கல்களையும், மோதல் போக்குகளையும் உருவாக்கி வைத்துள்ளது. இது பிற்காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் மாறலாம்.



    வறுமையை போக்குவதற்கு உரிய நடவடிக்கைள் எதையும் எடுக்கவில்லை. நாட்டின் முன்னேற்றம் இந்த ஆட்சியால் தடைபட்டுள்ளது.

    அடுத்த 6 மாதங்களில் காங்கிரசில் புதிய மாற்றங்கள் ஏற்படும். அமைப்பு ரீதியில் பல்வேறு அதிரடியாக மாற்றங்கள் செய்யப்படும். இனி புதிய காங்கிரசாக ஒளிர போவதை பார்ப்பீர்கள்.

    குஜராத் தேர்தலில் காங்கிரஸ் சிறந்த வளர்ச்சியை பெற்றிருப்பதை காண முடிந்தது. 2019 பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். அதற்கான வலுவோடு தற்போது காங்கிரஸ் இருக்கிறது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

    நான் இப்போது உங்கள் மத்தியில் வந்திருப்பது உங்களிடம் எதுவும் சொல்வதற்காக இல்லை. உங்களின் உதவியை கேட்டு வந்திருக்கிறேன். நாட்டு மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியிலும், பிளவுபடுத்தும் வகையில் செயல்பட்டு வருபவர்களுக்கு எதிராக போராட நீங்கள் கைகொடுக்க வேண்டும் என்று உங்கள் உதவியை கேட்கிறேன்.

    1947-ல் இந்தியாவை பாதுகாப்பதற்காக உங்கள் உதவியை மகாத்மாகாந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கார் போன்றவர்கள் கேட்டனர். இப்போது இந்தியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உங்கள் உதவியை கேட்கிறேன்.

    நாட்டின் நிலைமை மிக மோசமான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மக்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்படுகிறது. ஆனால் மத்திய அரசு எதையும் செய்யாமல் மவுனம் காத்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.#tamilnews
    Next Story
    ×