search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே உண்மையான உறவு தொடங்குகிறது: டிரம்ப்பின் திடீர் காதல்
    X

    அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே உண்மையான உறவு தொடங்குகிறது: டிரம்ப்பின் திடீர் காதல்

    அமெரிக்காவிடம் இருந்து நிறைய ஆதாயங்களை அடைந்த பாகிஸ்தானுடன் உண்மையான உறவு தற்போதுதான் அரும்பத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
    வாஷிங்டன்:

    கனடாவை சேர்ந்த ஜோசுவா பாயல் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கெயித்லான் கோல்மேனை திருமணம் செய்திருந்தார். இவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்தபோது தலிபான்கள் ஆதரவு பெற்ற ஹக்கானி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அப்போது கெயித்லான் கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த தம்பதியர் ஒரு ரகசிய இடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பிணைக்கைதிகளாக சிறைவைக்கப்பட்டு இருந்தனர். இடையில் அவர்களுக்கு 3 குழந்தைகளும் பிறந்தன. அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வந்த அமெரிக்க படைகளால், தம்பதியினர் சிறைவைக்கப்பட்டு இருந்த இடத்தை கண்டறிய முடியவில்லை.

    ஜோசுவா -கெயித்லான் தம்பதியையும், அவர்களது 3 குழந்தைகளையும் கடந்த 11-ந் தேதி குர்ரம் பள்ளத்தாக்கு வழியாக பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகள் கொண்டு சென்றதை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தது. உடனே இது குறித்த விவரங்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்தது.

    இதைத்தொடர்ந்து அதிரடியாக களத்தில் இறங்கிய பாகிஸ்தான் ராணுவத்தினர், தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு பாயல் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தின் போது பாயலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் பத்திரமாக கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தங்கள் நாட்டு குடிமக்களை பாகிஸ்தான் ராணுவம் மீட்டு இருப்பது அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் ஹக்கானி குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாகிஸ்தானை கடுமையாக கண்டித்து இருந்த டிரம்ப், இது ஒரு ‘நேர்மறையான நடவடிக்கை’ என நேற்று பாராட்டினார்.

    இந்தநிலையில், பாகிஸ்தானை டிரம்ப் இன்று வானளாவ புகழ்ந்து தள்ளியுள்ளார்.

    அமெரிக்காவுடன் பல்வேறு வகைகளில் பாகிஸ்தான் அளித்துவரும் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், நமது நாட்டிடம் இருந்து பாகிஸ்தான் நிறைய ஆதாயங்களை அடைந்ததாக நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டு தலைவர்களுடனான உண்மையான உறவு தற்போதுதான் தொடங்கியுள்ளது. மற்ற நாடுகளைப்போல் பாகிஸ்தானும் அமெரிக்காவை மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×