search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்தில் தொங்கு பாராளுமன்றம்: தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை
    X

    நியூசிலாந்தில் தொங்கு பாராளுமன்றம்: தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை

    நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், தொங்கு பாராளுமன்றம் அமைய உள்ளது.
    வெலிங்டன்:

    நியூசிலாந்தில் இன்று பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பழமைவாத தேசிய கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேசிய கட்சி சார்பில் தற்போதைய பிரதமர் பில் இங்கிலீஷ் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். தொழிலாளர் கட்சி சார்பில் ஜெசிந்தா ஆண்டர்ன் நிறுத்தப்பட்டார்.

    இதுதவிர நியூசிலாந்து பர்ஸ்ட், பசுமைக் கட்சி, ஏசிடி நியூசிலாந்து உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தின. தலைவர்கள் தீவிர பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

    மாலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், 99.8 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்களின் வெற்றி மற்றும் கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் தேசிய கட்சி அதிக உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. எனினும், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    மொத்தம் உள்ள 120 உறுப்பினர்களில் ஆட்சியமைக்க 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில், தேசிய கட்சி 58 உறுப்பினர் பதவிகளையும், தொழிலாளர் கட்சி 45 உறுப்பினர்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி 9, பசுமைக்கட்சி - 7, ஏசிடி -1 என்ற நிலையில் உள்ளது. புதிய வாக்காளர்கள் மற்றும் வெளியிடங்களில் இருந்து வாக்களித்தவர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இறுதி செய்ய ஓரிரு நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இது வாக்கு விகிதத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே, தொங்கு பாராளுமன்றம் அமையவே வாய்ப்பு உள்ளது.

    எனவே, தொங்கு பாராளுமன்றத்தில் பிரதமர் யார்? என்பதை முடிவு செய்யும் இடத்தில் நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி உள்ளது. எனவே, அக்கட்சியின் தலைவர் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கிங்மேக்கராக இருப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×