search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணு ஆயுதங்களில் சமநிலை பெறும் வரையில் உற்பத்தியை தொடருவோம்: வடகொரியா மிரட்டல்
    X

    அணு ஆயுதங்களில் சமநிலை பெறும் வரையில் உற்பத்தியை தொடருவோம்: வடகொரியா மிரட்டல்

    அணு ஆயுத கையிருப்பில் அமெரிக்காவுக்கு இணையாக சமநிலை பெறும் வரையில் உற்பத்தியை தொடருவோம் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
    பியாங்யாங்:

    வடகொரியா சமீபத்தில் 6-வதுதடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து அமெரிக்கா முயற்சியால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

    அதன் பிறகாவது வட கொரியா ஏவுகணை சோதனைகள் மற்றும் அணுஆயுத சோதனையை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடகொரியா தன்நிலையில் இருந்து மாறவில்லை. மாறாக நேற்று மீண்டும் ஒரு ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது.

    சுமார் 3200 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணை வடகொரியாவின் சுனான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி செலுத்தப்பட்டு, ஜப்பான் நாட்டின் மீது பறந்து சென்று, பசிபிக் கடலில் விழுந்தது. ஜப்பான் நாட்டில் உள்ள குவாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து, மிரட்டுவதற்காக இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில், வடகொரியாவின் இந்த அத்துமீறலை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இன்று அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தின்போது பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் வடகொரியாவின் போக்குக்கு கண்டனம் தெரிவித்தனர்.  

    இந்நிலையில், அணு ஆயுத கையிருப்பில் அமெரிக்காவுக்கு இணையாக சமநிலை பெறும் வரையில் உற்பத்தியை தொடருவோம் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளதாக வடகொரியா அரசுக்கு சொந்தாமான நாளேடு இன்று குறிப்பிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, இன்று அந்த நாளேட்டில் வெளியான சிறப்பு கட்டுரையில், ‘நம் மீது ஏகப்பட்ட தடைகளை விதித்துள்ள பெரிய வல்லரசு நாடுகளுக்கு நமது அணு ஆயுத வல்லமையை நாம் நிலைநாட்டி காட்ட வேண்டும். இதன்மூலம், வடகொரியா மீது ராணுவ ரீதியிலான நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் அமெரிக்காவுக்கு ஏற்படாத வகையில் அந்நாட்டுக்கு இணையாக நமது அணு ஆயுதங்கள் கையிருப்பில் இருக்க வேண்டும்’ என கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×