search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனாமா முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் கோர்ட்டு இன்று தீர்ப்பு - என்ன ஆவார் நவாஸ் ஷெரீப்?
    X

    பனாமா முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் கோர்ட்டு இன்று தீர்ப்பு - என்ன ஆவார் நவாஸ் ஷெரீப்?

    பனாமா கேட் ஊழல் தொடர்பாக நவாஸ் ஷெரீப், அவரது குடும்பத்தினர் மீது விசாரணை முடிந்த நிலையில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது.
    இஸ்லாமாபாத்:

    பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரிப்பின் பெயரும் இருந்ததால், அவருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது.



    இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ஷெரிப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் என அனைவரிடமும் விசாரணை முடிந்தது.

    இதைதொடர்ந்து, சிறப்பு கூட்டு புலனாய்வு குழு, தனது அறிக்கையை கடந்த ஜூலை 10-ம் தேதி அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

    பனாமா கேட் ஊழல் தொடர்பாக நவாஸ் ஷெரீப், அவரது குடும்பத்தினர் மீது விசாரணை கடந்த ஜூலை 21-ம் தேதியுடன் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான இந்த வழக்கில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது. காலை 11.30 மணியளவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வெளியாகும் பட்சத்தில் அது அவரது அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
    Next Story
    ×