search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 ஆயிரம் டன் ஆயுதம் தாங்கி போர் கப்பல்: சீனா இன்று அறிமுகப்படுத்தியது
    X

    10 ஆயிரம் டன் ஆயுதம் தாங்கி போர் கப்பல்: சீனா இன்று அறிமுகப்படுத்தியது

    உள்நாட்டு தயாரிப்பான 10 ஆயிரம் டன் எடையுள்ள அதிநவீன ஆயுதம் தாங்கி போர் கப்பல் சீனாவின் கடற்படையில் இணைக்கப்பட்டது.
    பீஜிங்:

    உலகின் அதிகமான மக்கள்தொகையை கொண்ட பெரிய நாடாக அறியப்படும் சீனா, ஆயுத பலத்திலும், விண்வெளித்துறையிலும் இந்தியாவை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    குறிப்பாக, இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கடற்படை ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்கள் நாட்டு கடற்படையை அதிநவீனப்படுத்த சீனா தீர்மானித்துள்ளது.

    அந்நாட்டு வருடாந்திர பட்ஜெட்டில் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளை நவீனப்படுத்த ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு வெளிநாடுகளில் இருந்து போர் ஆயுதங்களை கொள்முதல் செய்வதை சீனா தவிர்த்து வருகிறது. ராக்கெட், போர் கப்பல்கள் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்காமல் உள்நாட்டிலேயே
    தயாரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 10 ஆயிரம் டன் எடை கொண்ட போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய அதிநவீன போர் கப்பலை தனது நாட்டு கடற்படைக்கு சீனா இன்று அர்ப்பணித்துள்ளது.

    புதிய தலைமுறைக்கான அதிநவீன போர் கப்பல்கள் வரிசையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போர் கப்பலில் வான்வழி தாக்குதல்களை தடுத்து அழிக்கும் ஆயுதங்கள், வான்வெளியில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்கள், கப்பல்களில் இருந்தும் நீர்மூழ்கி கப்பல்கள் வழியாக வரும் தாக்குதல்களை எதிர்க்கவும் கூடிய அதிநவீன ரேடார்களும் அதிநவீன கருவிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

    ஷங்காய் நகரில் உள்ள ஜியாங்னான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் இந்த இணைப்பு விழா இன்று நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றொரு அதிநவீன போர் கப்பலான ‘லியானிங்’ குண்டு மழைகளை பொழிந்து பேரழிவை உண்டாக்கும் அதிநவீன ஜெட் விமானங்களுடன் கிழக்கு சீனாவில் உள்ள குவிங்டாவ் நகரில் இருந்து கடந்த 25-ம் தேதிபுறப்பட்டு சென்று அந்நாட்டு கடல் பகுதியில் வழக்கமான போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×