search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
    X

    நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா

    தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தானை அமெரிக்காவின் நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யக்கோரி அந்நாட்டு பாராளுமன்ற செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் திகழ்வதாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகின்றன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அமெரிக்கா ஆண்டுதோறும் பெருமளவு நிதி உதவியும் செய்து வருகிறது.

    தீவிரவாதத்தை திறம்பட எதிர்ப்பதற்காக பாகிஸ்தானுக்கு இந்த நிதி அளிக்கப்படுவதாக அமெரிக்கா கூறி வருகிறது. அண்மையில் அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், நிதி வழங்கும் விவகாரத்தில் சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

    ரிக் நோலன்

    பாகிஸ்தானுக்கு நேட்டோ அல்லாத மிகப்பெரிய நட்பு நாடு (MNNA) என்ற அந்தஸ்தை அமெரிக்கா வழங்கப்பட்டது.

    கடந்த 2004 ஆம் ஆண்டு அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானுக்கு இந்த அந்தஸ்தை வழங்கினார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருக்கும் இந்த அந்தஸ்தின் கீழ்,  பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுத விற்பனை நடைமுறைகளை துரிதப்படுத்துவது, அமெரிக்க கடன் உத்தரவாத திட்டம் ஆகிய சலுகைகளை பாகிஸ்தான் பெற முடியும்.

    மேலும், அமெரிக்காவின் அதிநவீன ராணுவ தளவாடங்களை கையிருப்பாக வைத்துக்கொள்ளவும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மற்றும் மேம்பாட்டு திட்டங்களிலும் பாகிஸ்தான் பங்கேற்க முடியும்.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க செனட் சபையில் தற்போது மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

    குடியரசு கட்சியின் எம்.பி டெட் போ மற்றும் ஜனநாயக கட்சியின் எம்.பி ரிக் நோலன் ஆகிய இருவரும் கூட்டாக இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளனர். 

    டெட் போ

    அமெரிக்காவின் வெளியுறவு விவகாரங்களில் உறுப்பினராகவும் இருக்கும் டெட் போ கூறுகையில், தனது கையில் இருக்கும் அமெரிக்கர்களின் இரத்தக்கரைக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்.

    பல ஆண்டுகளாக பாகிஸ்தான் இரட்டை வேடத்துடன் அமெரிக்காவுடனான நட்பை கொண்டுள்ளது. ஒசாமா பின்லேடனுக்கு புகலிடம் அளிப்பதில் இருந்து தலிபான்கள் ஆதரவு வரை பாகிஸ்தான் பிடிவாதமாக நடவடிக்கை எடுக்க மறுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் அப்போதைய  பாதுகாப்புத்துறை செயலர் ஆஷ் கர்டர், பாகிஸ்தான் ஹக்கானி நெட்வொர்க்கிற்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அந்நாட்டுக்கு வழங்கி வந்த நிதியில், சுமார் 300 மில்லியன் டாலர் தொகையை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×