search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகெங்கிலும் அமைதி நிலவ கூடுதல் முயற்சி - போப் பிரான்சிஸை சந்தித்த பின்னர் டிரம்ப் பேச்சு
    X

    உலகெங்கிலும் அமைதி நிலவ கூடுதல் முயற்சி - போப் பிரான்சிஸை சந்தித்த பின்னர் டிரம்ப் பேச்சு

    உலகெங்கிலும் அமைதி நிலவ கூடுதல் முயற்சி எடுக்க இருப்பதாக போப் பிரான்சிஸை சந்தித்த பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    ரோம்:

    உலகெங்கிலும் அமைதி நிலவ கூடுதல் முயற்சி எடுக்க இருப்பதாக போப் பிரான்சிஸை சந்தித்த பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இந்த பயணத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் மத தலைவர்களை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இத்தாலி நாட்டுக்குச் சென்ற ட்ரம்ப் இன்று அதிபர் செர்ஜியோவைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். முன்னதாக போப்பாண்டவர் பிரான்சிசை வாடிகன் நகரில் சந்தித்த டிரம்ப், அவருடன் தனியாக அரை மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.

    டொனால்ட் டிரம்ப், போப் பிரான்சிஸ் ஆகியோருக்கு இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்ததால், இந்தச் சந்திப்பு குறித்து உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் நபர்களைத் தடுக்கும் வகையில் இருநாட்டு எல்லையில் சுவர் எழுப்பப்போவதாக டிரம்ப் அறிவித்த போது அதற்கு போப் பிரான்சிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    நாடுகளுக்கு இடையே பாலங்கள் அமைப்பதே நல்ல தலைவருக்கு அழகு எனத் தெரிவித்த போப், சுவர் எழுப்புவது உண்மையான கிறிஸ்துவரின் பணியாக இருக்காது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    அப்போது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப், போப் பிரான்சிஸ் அவ்வாறு பேசியது அவருக்குத் தேவையற்றது என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த சந்திப்பின் இறுதியில் டிரம்புக்கான தமது செய்தி அடங்கிய குறிப்பு ஒன்றை வழங்கிய போப் பிரான்சிஸ், பல்வேறு பரிசுப்பொருட்களையும் அளித்தார். பதிலுக்கு மார்ட்டின் லூதர் கிங் எழுதிய புத்தகம் ஒன்றை டிரம்ப் போப் பிரான்சிஸ்கு பரிசாக வழங்கினார்.

    சந்திப்பு முடிந்த பின்னர், “வாடிகனை விட்டு கிளம்பும் போது உலகெங்கிலும் அமைதி நிலவ கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என உறுதியெடுத்துக் கொண்டேன்” என டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை முடித்துக் கொண்ட டிரம்ப் ஜார்சியா கிளம்பிச் சென்றார்.

    Next Story
    ×