search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் வீடுகள் மீது கல்வீச்சு: கார்கள்- ஆட்டோக்கள் உடைப்பு
    X

    கடலூரில் வீடுகள் மீது கல்வீச்சு: கார்கள்- ஆட்டோக்கள் உடைப்பு

    கடலூரில் இருபிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில் வீடுகள் மீது கல்வீசி தாக்கியதில் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் சேதம் அடைந்ததால் பதட்டம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் ஏணிக் காரன்தோட்டம் பகுதியில் மாரியம்மன்கோவில் உள்ளது. நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சாலையின் ஓரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அருகில் உள்ள மற்றொரு பகுதியை சேர்ந்த சிலர் அந்த வழியாக சென்றனர். திடீர் என்று இருபிரிவினர்களுக்கிடையே வாய்த்த கராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    அவர்களில் ஒரு பிரிவினர் ஆத்திரம் அடைந்து ஏணிக்காரன் தோட்டம் பகுதிக்கு சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், ஆட்டோ, மினி லாரி உள்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

    மேலும் அவர்கள் அங்குள்ள வீடுகள் மீது கற்களை சரமாரியாக வீசினர். இதில் பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமானது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். வாகனங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்ததால் ஆத்திரம் அடைந்த ஏணிக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டனர்.

    பின்னர் அவர்கள் மாரியம்மன்கோவில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியவர்களை கைது செய்யவேண்டும். அப்போதுதான் கலைந்து செல்வோம் என்றனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


    இதற்கிடையே தங்கள் தரப்பினரை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி கடலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் கடலூர்- சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இது தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #tamilnews

    Next Story
    ×