search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டிவனத்தில் தாய்-தங்கையை குத்தி கொன்று வாலிபர் தற்கொலை
    X

    திண்டிவனத்தில் தாய்-தங்கையை குத்தி கொன்று வாலிபர் தற்கொலை

    தந்தையின் நோயை குணமாக்க பணம் கிடைக்காததால் தாய்-தங்கையை கொன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 52). இவருடைய மனைவி சுமதி (45). இவர்களுக்கு ரஞ்சித்குமார் (25), வித்யபிரியா (21) என்ற மகளும் இருந்தனர்.

    ராஜாராம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜாராமின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் அவருக்கு ஆபரே‌ஷன் செய்ய வேண்டும் என்று கூறினர். இதற்கு ரூ.60 லட்சம் வரை செலவாகும் என்று டாக்டர்கள் கூறினர்.

    மேலும் கல்லீரலை மாற்றினாலும் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும் டாக்டர்கள் கூறினர். இதனால் ராஜாராம் குடும்பத்தினர் மன வேதனை அடைந்தனர்.

    ராஜாராமை காப்பாற்ற தனது உறவினர்களிடம் பணத்தை வாங்க ஏற்பாடு செய்தனர். அவர்களுக்கு குறைந்த அளவே பணம் கிடைத்தது. இந்த பணத்தை வைத்து ராஜாராமுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று சுமதி, ரஞ்சித்குமார், வித்யபிரியா ஆகியோர் வேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 பேரும் திண்டிவனத்தில் உள்ள வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி சுமதி, வித்யபிரியா ஆகியோர் வீட்டில் தூக்கில் தொங்கினர். தனது தாயும், தங்கையும் தூக்கில் தொங்கி துடிதுடிப்பதை பார்த்த ரஞ்சித்குமார் கண்ணீர் வடித்தார்.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் கீழே இறக்கினார். பின்னர் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தாயையும், தங்கையையும் மார்பு உள்பட பல்வேறு இடங்களில் குத்தினார்.

    இதில் சுமதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். வித்யபிரியாவுக்கு உயிர் இருந்ததால் அவரது முகத்தில் மண்எண்ணையை ஊற்றி ரஞ்சித்குமார் தீ வைத்து எரித்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    தனது தாய், தங்கை 2 பேரும் இறந்த பின்னர் வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்திய போது ரஞ்சித்குமார் தனது தந்தை ராஜாராமுக்கு எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில் கூறியிருப்பதாவது:-

    உங்களுக்கு சிகிச்சை அளித்தாலும் உயிர் பிழைக்க மாட்டீர்கள் என்று டாக்டர்கள் கூறினர். உங்களை பிணமாக பார்க்க எங்களுக்கு மனம் இல்லை. நீங்கள் இல்லாத உலகத்தில் எங்களால் வாழ முடியாது. உங்களை விட்டு செல்வது எங்களுக்கு கஷ்டமாக உள்ளது. நாங்கள் 3 பேரும் முடிவை தேடி கொண்டோம். எங்களது சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    தந்தையின் நோயை குணமாக்க பணம் கிடைக்காததால் தாய்-தங்கையை கொன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×