search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிசி ஆலையில் கொத்தடிமையாக இருந்த 17 பேர் மீட்பு: உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு
    X

    அரிசி ஆலையில் கொத்தடிமையாக இருந்த 17 பேர் மீட்பு: உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

    செங்குன்றம் அருகே அரிசி ஆலையில் கொத்தடிமையாக இருந்த 17 பேர் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் கொத்தடிமைகள் இருப்பதாக சென்னை எழும்பூரில் உள்ள சர்வதேச நீதி குழும தொண்டு நிறுவன நிர்வாகி கிளாடிஸ்பின்னிக்கு தகவல் கிடைத்தது. உடனே இவர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியை சந்தித்து கொத்தடிமைகளை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அம்பத்தூர் உதவி கலெக்டர் அரவிந்தன், மாதவரம் தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் ரமேஷ், மாதவரம் வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று அந்த ஆலைக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

    அப்போது அங்கு இருந்த மதுராந்தகம் பாக்கம் கிராமத்தை சேர்ந்த சேகர் (வயது 45), சரோஜா (40), விஜய் (18), ரமேஷ் (36), கார்த்திக் (32), வினோத் (25), அமுலு (20), காஞ்சீபுரத்தை சேர்ந்த ஜீவா (26), மணிமாலா (22), மாமல்லபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (50), கஸ்தூரி (40) உள்ளிட்ட 17 பேரிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.

    அவர்கள், 8 வருடங்களாக ஆலையில் வேலை செய்து வருவதாகவும், சொந்த ஊருக்கு அனுப்பாமல் ஆலையிலேயே கொத்தடிமைகளாக அடைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து 17 பேரும் மீட்கப்பட்டு அம்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அரசு உதவிகளுடன் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சரவணன், செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். புழல் உதவி கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் வழக்குப்பதிந்து அரிசி ஆலை குமஸ்தா பாபுவை (60) கைது செய்தார். தப்பி ஓடிய உரிமையாளர் சீனிவாசனை போலீசார் தேடி வருகின்றனர். 
    Next Story
    ×