search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது

    கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி,பீன்ஸ், அவரைக்காய் போன்றவற்றின் விலை கடுமையாக குறைந்து உள்ளது.

    சென்னை:

    கோயம்பேடு மார்க்கெட் டில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக உச்சத்துக்கு இருந்து வந்த காய்கறிகள் விலை திடீரென சரிந்துள்ளது.

    ஆனால் சின்ன வெங்காயம், பல்லாரி வெங்காயத்தின் விலை குறையவில்லை. தொடர்ந்து உச்சததில் நீடித்து வருகிறது.

    கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.130-க்கும், பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் நிலையில் மற்ற காய்கறிகள் விலை குறைந்துள்ளது.

    தக்காளி, பீன்ஸ், அவரை ஆகியவற்றின் விலை கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டது. அவை இப்போது கிலோ ரூ.25-ரூ.30 ஆக குறைந்துள்ளது.

    அதே போல முருங்கைக் காய் ஒரு கிலோ ரூ.110-க்கு விற்கப்பட்டது. அவற்றின் விலை இன்று ரூ.60 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.18-க்கும், கேரட் கிலோ ரூ.30-க்கும் நிலையான விலையில் விற்கப்படுகிறது.

    கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்ட பச்சை பட்டாணி ரூ.60 ஆக குறைந்தது. கத்திரிக்காய் விலை பாதியாக குறைந் துள்ளது. கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்ட கத்திரிக்காய் ரூ.15 ஆக குறைந்துள்ளது.

    ரூ.40-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.25-க்கும், கோவக்காய் ரூ.20-க்கும், கொத்தவரக்காய் ரூ.15-க்கும், பாவற்காய் ரூ.25-க்கும் விற்கப்படுகிறது.

    முட்டைகோஸ் விலை படு வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட முட்டை கோஸ் ரூ.25-க்கு இன்று விற்கப்படுகிறது. காலிபிளவர் ரூ.30, இஞ்சியின் விலை ரூ.40 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகி வி.ஆர்.சவுந்தரராஜன் கூறியதாவது:-

    “வெங்காயம் விலை தவிர மற்ற அனைத்து காய்கறிகள் விலையும் குறைந்துள்ளது. காய்கறி வரத்து அதிகம் இல்லை என்றாலும் விலை குறைவதற்கு காரணம் வியாபாரம் மந்தமாக இருப்பதுதான். மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வாங்கி செல்கின்றனர்.

    சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள சிறு சிறு மார்க்கெட் வியாபாரிகள், வியாபாரம் மந்தமாக இருப்பதால் குறைந்த அளவில் காய்கறிகள் வாங்கி செல்வதாக தெரிவிக்கின்றனர். மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம்.

    ஜனவரி மாதத்தில் காய்கறி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. பருவமழை பெய்துள்ளதால் காய்கறி விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காய்கறிகளை வாங்க ஆட்கள் இல்லாததால் வியாபாரம் மந்தமாக உள்ளது. இதனால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது” என்றார்.

    Next Story
    ×