search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடைகள் திறக்க அனுமதி: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது - ராமதாஸ், ஜி.கே.வாசன் அறிக்கை
    X

    மதுக்கடைகள் திறக்க அனுமதி: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது - ராமதாஸ், ஜி.கே.வாசன் அறிக்கை

    மதுக்கடைகள் திறக்க அனுமதியளித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் மற்றும் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்த விதிக்கப்பட்ட தடை நகர்ப் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும், அப்பகுதிகளில் மதுக்கடைகளை தாராளமாக நடத்திக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் விளக்கமளித்திருக்கிறது.

    உச்சநீதிமன்றத்தின் இந்த விளக்கம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தீர்ப்பு சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    மதுக்கடைகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சட்டப் போராட்டத்தின் பயனாக தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் உட்பட நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த 90,000 மதுக்கடைகள் மூடப்பட்டன.

    இதனால் மது வணிகம் மூலம் கிடைத்த வருவாய் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு சட்டவிரோத வழிகளில் மதுக்கடைகளை திறந்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. வழக்குத் தொடர்ந்த நிலையில், தமிழக ஆட்சியாளர்கள் உச்சநீதி மன்றத்திற்கு சென்று நெடுஞ்சாலையோரங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி பெற்றுள்ளனர்.நகர்ப்பகுதிகளில் நெடுஞ் சாலைகளில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று அனுமதி அளித்துள்ள உச்சநீதி மன்றம் அதற்காக அளித்துள்ள விளக்கம் வியப்பாக உள்ளது.

    குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதும், விபத்துக்களை ஏற்படுத்துவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் தான் நடக்கிறது என்று கூற முடியாது. அதனால் தான் இருவகை நெடுஞ்சாலைகளிலும் மது வணிகத்திற்கு தடை விதித்தோம்’’ என்று கூறப்பட்டு இருந்தது. மதுவுக்கு தடை விதிப்பதில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இப்போது நகரங்களுக்குள் செல்லும் சாலைகளையும், நகரங்களுக்கு வெளியில் உள்ள சாலைகளையும் பிரித்துப் பார்த்து மதுவுக்கு அனுமதி அளித்திருப்பது புரியாத புதிராக உள்ளது.

    நகரப்பகுதிகளில் மதுக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கும் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது தெரிந்தும் நகரப் பகுதிகளில் சாலை யோரங்களில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதிப்பது வியப்பளிக்கிறது.

    தமிழ்நாட்டில் நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்றுவதற்கான முயற்சியில் சிறிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. மதுவை ஒழித்து மக்களைக் காக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நோக்கம் ஆகும். அதிலிருந்து பா.ம.க. ஒருபோதும் பின் வாங்காது.

    தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டது. அதை உணர்ந்து மதுவுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை பா.ம.க. நடத்தும்; வெற்றி பெறும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


    ஏற்கனவே இருக்கின்ற மதுபானக்கடைகளை படிப்படியாக நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழகத்தின் கோரிக்கையாக தொடர்கின்றது. இச்சூழலில் தேவையில்லாமல் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் தரத்தை மேம்படுத்த முயற்சிக்காமல், அதனை குறைக்கும் விதமாக உள்ளாட்சி சாலைகளாக மாற்றி, மக்கள் வாழ்வில் இருளை ஏற்படுத்துகின்ற மதுபானங்களை விற்பதில் தமிழக அரசு அதிக அக்கரை காட்டக்கூடாது.

    எனவே தமிழகத்தில் புதியதாக மதுபானக் கடைகளை இனிமேல் திறக்கக்கூடாது. அதுமட்டுமல்ல படிப்படியாக மதுபானக்கடைகளை மூடி குறைந்தபட்சம் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் டாஸ்மாக் மதுபானக் கடைகளே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    Next Story
    ×