search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகளில் வெடிகுண்டு இருப்பதாக பீதி: மகன்-மகள் விடுமுறை கேட்டதால் போனில் மிரட்டிய பெண் கைது
    X

    பள்ளிகளில் வெடிகுண்டு இருப்பதாக பீதி: மகன்-மகள் விடுமுறை கேட்டதால் போனில் மிரட்டிய பெண் கைது

    மகன்- மகள் விடுமுறை கேட்டதால் பள்ளிகளுக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.
    மதுரை:

    மதுரையில் சிம்மக்கல், சுப்பிரமணியபுரம் பகுதிகளில் உள்ள 2 பள்ளிகளுக்கு நேற்று காலை போனில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

    போனில் பேசிய மர்ம பெண் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், முடிந்தால் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் பதட்டம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

    சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது புரளி என்பது தெரியவந்தது. ஆனாலும் சோதனை நீண்ட நேரம் நடந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    போனில் மிரட்டல் விடுத்த பெண் குறித்து திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பள்ளிக்கூட டெலிபோனில் உள்ள காலர் ஐ.டி.யை சோதித்தபோது அதில் போனில் மிரட்டிய பெண்ணின் செல்போன் எண் இருந்தது.

    அந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் போனில் மிரட்டிய பெண் மதுரை பாண்டிய வேளாளர் தெருவைச் சேர்ந்த சரவணன் மனைவி பாண்டிச்செல்வி (வயது31) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பாண்டிச் செல்வியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பாண்டிச்செல்வியின் மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை எப்படி கிடைக்கும் என்று யோசித்த பாண்டிச்செல்வி இரு பள்ளிகளுக்கும் தனது செல்போன் மூலம் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

    கைதான பாண்டிச்செல்வியை போலீசார் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வெடிகுண்டு மிரட்டல் வழக்கை விரைந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்த போலீசாரை மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்.
    Next Story
    ×