search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 66 ஏரிகள் நிரம்பின
    X

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 66 ஏரிகள் நிரம்பின

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 910 ஏரிகளில் 66 ஏரிகள் முழு கொள்ளளவினை எட்டியுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 910 ஏரிகளில் 66 ஏரிகள் முழு கொள்ளளவினை எட்டியுள்ளது.

    இது குறித்து பொதுபணித்துறை அதிகாரிகள் கூறும் போது, “வடகிழக்கு பருவ மழையின் ஆரம்ப நிலையிலேயே 66 ஏரிகள் முழு கொள்ளளவினை எட்டியுள்ளன. ஏராளமான ஏரிகள் நீர்வரத்தின் காரணமாக நிரம்பும் நிலையில் உள்ளது. இன்றும் நாளையும் மழை நீடித்தால் மாவட்டத்தில் உள்ள ஏராளமான ஏரிகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.

    மழை பாதிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

    மாவட்டத்தில் 84 அதிக பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களையும், 117 பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களும், 183 மிதமான பாதிப்பு ஏற்படும் இடங்களும், 131 குறைந்த பாதிப்புக்குள்ளாகும் இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. மழையால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் மீட்புப் பணிகளுக்காக தீயணைப்பு, மின்வாரியம், காவல் துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் என 11 துறை அலுவலர்கள் கொண்ட 84 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை ஆகிய துறைகள் முலம் 1 லட்சத்து 46 ஆயிரத்து 600 மணல் முட்டைகள் தயார் நிலையில் உள்ளன.

    மின்வாரியத்தினர், பாம்பு பிடிப்போர், மீனவர்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    அவசர காலங்களில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு 044-27237107, 27237207 என்ற எண்களிலும் அழைக்கலாம். மேலும் 94450 51077 மற்றும் 94450 71077 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நகரம் எங்கும் மழைநீர் தேங்கி நிற்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்குள் முடங்கியுள்ளனர்.

    ஸ்தலசயண பெருமாள் கோவில் வளாகம் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

    மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி மாமல்லபுரம் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. கோவளம், நெம்மேலி, பட்டிபுலம், தேவநேரி, மாமல்லபுரம், வெண்புரு‌ஷம், கொக்கிலமேடு, கல்பாக்கம், புதுப்பட்டினம் பகுதி மீனவர்கள் வானிலை நிலைய எச்சரிக்கை காரணமாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    பழவேற்காடு பகுதியில் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
    Next Story
    ×