search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரல் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை
    X

    ஏரல் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை

    ஏரல் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஏரல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் பகுதியை சேர்ந்தவர் லெனின் (வயது37). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கடத்தல், திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    லெனினுக்கு சொந்தமான வயல் மாறமங்கலம் கிராமத்தில் உள்ளது. அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தனது ஊரை சேர்ந்த கூலித் தொழிலாளியான கோட்டாளம் (35) என்பவரை நேற்றுஇரவு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றார்.

    அவர்கள் இருவரும் தண்ணீர் பாய்ச்சிவிட்டு நள்ளிரவு 12 மணியளவில் வயலில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தனர். மாறமங்கலத்தில் இருந்து அகரம் நோக்கி வந்த போது அவர்களது மோட்டார் சைக்கிளின் மீது அவ்வழியாக எதிரே வந்த கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த லெனின், கோட்டாளம் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதையடுத்து காரின் உள்ளே இருந்து 5-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வெளியே வந்தனர். அவர்கள் ரோட்டோரம் வயலுக்குள் விழுந்து கிடந்த லெனினை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இதை பார்த்த கோட்டாளம் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். லெனின் இறந்ததை உறுதி செய்ததும் கொலை கும்பல் தாங்கள் வந்த காரிலேயே தப்பிச்சென்று விட்டது. லெனின் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டது குறித்து, கொலை கும்பலிடம் இருந்து தப்பி வந்த கோட்டாளம் ஊருக்குள் சென்று கூறினார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு லெனினின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஏரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லெனினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப் பதிந்து லெனினை கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றனர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

    லெனின் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால் முன் விரோதம் காரணமாகவோ, பழிக்கு பழியாகவோ அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லெனினுக்கு தேவி என்ற மனைவி, 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் லெனினுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கோட்டாளத்திற்கு கார் மோதியதில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை நடந்த போது சம்பவ இடத்தில் அவர் இருந்ததால், கொலையாளிகள் குறித்த விவரங்களை அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×