search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விரிசல் அடைந்த வீட்டை படத்தில் காணலாம்.
    X
    விரிசல் அடைந்த வீட்டை படத்தில் காணலாம்.

    அண்ணாநகரில் சுரங்க மெட்ரோ ரெயில் ஓடும்போது வீடுகளில் விரிசல்: பொதுமக்கள் பீதி

    அண்ணாநகரில் சுரங்க மெட்ரோ ரெயில் ஓடும் போது வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    அம்பத்தூர்:

    திருமங்கலம்- நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த மாதம் தொடங்கியது.

    சுரங்கப்பாதையில் செனாய்நகர், திரு.வி.க. பூங்கா, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் உள்ளன.

    சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில்கள் செல்லும்போது திரு.வி.க. நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் இடையே பீதி பரவியது. 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மிகப்பழமையானவை.

    மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் 4 வருடங்களுக்கு முன்பு நடந்தபோது வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் அதனை சரி செய்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் அந்த பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். மேலும் 1 இன்ஞ் அளவுக்கு பூமிக்கு அடியில் வீடுகள் உள்ளே சென்றதாகவும் பதட்டத்துடன் கூறி இருந்தனர்.

    குளியல் அறை, படுக்கை அறை போன்ற பகுதிகள் இடிந்து விழும் அளவுக்கு பெரியதாக விரிசல் காணப்படுகிறது.

    இதுபற்றி மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஐ.ஐ.டி.யில் இருந்து பேராசிரியர்கள் வந்து விரிசல் காணப்பட்ட பகுதியில் நில அதிர்வு மீட்டர் பொறுத்தி அதிர்வை கணக்கிட்டனர். 2 நாட்களாக கண்காணித்ததில் 4 சதவீதம் அதிர்வு உருவாகி இருப்பது தெரியவந்தது.

    ஒரு சதவீதம் அதிர்வு இருந்தால் பாதிப்பு ஏற்படாது என்று தெரிகிறது. பாதிப்பு அதிகம் இருந்தும் அதிகாரிகள் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த லதா (40), ஆர்த்தி (38), ஹமீதா (60) ஆகிய பெண்கள் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில் 15 நிமிடத்துக்கு ஒருமுறை செல்லும்போது வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. மழை பெய்யும்போது பூமிக்கு அடியில் இருந்து தண்ணீர் வருகிறது. எந்த நேரத்தில் வீடு இடிந்து விழும் என்ற பயத்தில் இருந்து வருகிறோம்.

    அதனால் குழந்தைகளை உறவினர்கள் வீடுகளில் தங்க வைத்துள்ளோம். மேலும் தற்போது மழைக்காலம் தொடங்க இருப்பதால் பயத்தில் இருக்கிறோம்.

    அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×