search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்காலில் தீ விபத்து: 44 வீடுகள் எரிந்து நாசம்- முதியவர் உடல் கருகி பலி
    X

    காரைக்காலில் தீ விபத்து: 44 வீடுகள் எரிந்து நாசம்- முதியவர் உடல் கருகி பலி

    காரைக்காலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 44 வீடுகள் எரிந்து நாசம் ஆனது. உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் படித்திருந்த முதியவர் உடல் கருகி பலியானார்.
    காரைக்கால்:

    காரைக்கால் கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிச்சையம்மாள். இவரது வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் அருகில் உள்ள குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது.

    அந்த 5 வீடுகளில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியில் சுற்றியுள்ள வீடுகளிலும் தீ பற்றியது.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்து காரைக்கால் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களும், சுரக்குடி தீயணைப்பு நிலையம், நிரவி ஓ.என்.ஜி.சி. நிறுவனம், கீழவாஞ்சூர் மார்க் துறைமுகத்தில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களிலும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பெரும்பாலான வீடுகளில் கியாஸ் சிலிண்டர்கள் இருந்ததால், அவை வெடித்து சிதறாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த சிலிண்டர்களை அப்புறப்படுத்தி அருகிலுள்ள வாய்க்கால் மற்றும் குட்டைகளில் போட்டனர். தொடர்ந்து பொதுமக்களின் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் 41 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இந்த வீடுகளில் இருந்த சமையல் பொருட்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணி மணிகள், ஆவணங்கள், நகைகள், அனைத்தும் தீயில் கருகி நாசமானது.

    ஒருசில வீடுகளில் இருந்த குடிநீர் மோட்டார்கள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் தீயில் கருகின. தீ விபத்தில், உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் படுத்திருந்த மோகன் (வயது 63) என்ற முதியவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    தீ விபத்தில் சுமார் ரூ.65 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×