search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்: புகழேந்தி பேச்சு
    X

    அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்: புகழேந்தி பேச்சு

    திருப்பரங்குன்றத்தில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய புகழேந்தி, அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார்.

    திருப்பரங்குன்றம்:

    அ.தி.மு.க. (அம்மா அணி) மதுரை புறநகர் மாவட்டம் சார்பில் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்தில் நடந்தது.

    மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கருத்தக்கண்ணன், பகுதி செயலாளர்கள் ராமமூர்த்தி, ராமசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன் வரவேற்றார்.

    கூட்டத்தில் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பேசியதாவது:-

    பேரறிஞர் அண்ணாவை அரசியல் குருவாக கொண்டு வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அவர் அ.தி.மு.க. கட்சிக் கொடியில் அண்ணைவின் படத்தை வைத்து தனது விசுவாசத்தை காண்பித்தார். ஆனால் தற்போது அ.தி.மு.க.வில் விசுவாசம் இல்லாமல் போனது.

    முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு அம்மாவின் ஆட்சியை கலைக்க பார்த்தார். மேலும் கட்சியின் சின்னத்தை முடக்கினார். ஆனால் கட்சியை காப்பாற்றி இந்த அரசை உருவாக்கியவர் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும்தான்.

    அவராக கட்சியின் பொதுச் செயலாளராக வரவில்லை. இவர்கள்தான் வலுக்கட்டாயமாக சசிகலா பொதுச்செயலாளராக வரவேண்டும் என கூறினார்கள். எங்களால் ஆட்சிக்கு வந்தவர்கள் எங்கள் மீது வழக்குப் போடுவது எங்கும் கேள்விப்படாத ஒன்று.

    இந்த அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு அரசாணை வெளியிடவில்லை என்று சட்டமன்ற உறுப்பினர் ராஜன்சொல்லப்பா சொல்லியிருப்பதை வைத்தே இந்த அரசின் நிலை தெரிகிறது. இதை அவர்தான் அவர்களிடம் கேட்க வேண்டும்.

    எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு தினகரன் ஏறும் மேடைகளிலே கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கருத்துக் கணிப்புகளும் அதைதான் கூறுகிறது. நாளை முதல்வர் அவரே. ராஜன்செல்லப்பா எங்களை இணைக்க முயற்சி செய்வேன் என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் தான் எங்கள் பக்கம் இணைய வேண்டுமே தவிர நாங்கள் யாருடனும் இணைய வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×