search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்பெண்ணையாற்றில் வெள்ளம்: சாத்தனூர் அணை நீர்மட்டம் 9 நாட்களில் 20 அடி உயர்வு
    X

    தென்பெண்ணையாற்றில் வெள்ளம்: சாத்தனூர் அணை நீர்மட்டம் 9 நாட்களில் 20 அடி உயர்வு

    சாத்தனூர் அணை நீர் மட்டம் 9 நாட்களில் 20 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் கிராமம் வழியாக பாய்ந்து ஓடும் தென் பெண்ணையாற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சி காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது.

    இந்த அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    சாத்தனூர் அணையின் நீர்மட்ட உயரம் 119 அடி. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி.அணை நிரம்பியது. எனவே, அந்த அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இந்த வெள்ள தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டம், நீப்பத்துரை வழியாக சாத்தனூர் அணைக்கு ஆர்ப்பரித்து வருகிறது.

    கடந்த 3-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 75.35 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு 1,172 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

    இந்நிலையில், அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.80 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு 2,782 மில்லியன் கன அடியாகவும் உயர்ந்தது.

    இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி, 94.30 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு 2,978 மில்லியன் கன அடியாகவும் உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,303 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அதன்படி, கடந்த 9 நாள்களில் அணையின் நீர்மட்டம் 20 அடி உயர்ந்துள்ளது. இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×