search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பாபிஷேக விழாவில் 13 பெண்களிடம் 100 பவுன் நகைகள் பறிப்பு - போலீசார் விசாரணை
    X

    கும்பாபிஷேக விழாவில் 13 பெண்களிடம் 100 பவுன் நகைகள் பறிப்பு - போலீசார் விசாரணை

    தூத்துக்குடி சிவன் கோவில் கும்பாபிஷேக விழாவில் 13 பெண்களிடம் 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதற்கான பூஜைகள் கடந்த 3-ந் தேதி முதல் நடந்து வருகிறது. 14 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வன்நாகரத்தினம் மேற்பார்வையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நகரில் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

    இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் தூத்துக்குடி மீனாகானா தெருவை சேர்ந்த சண்முகம்மாள் (வயது 60) என்பவர் தனது மருமகள் ரேணுகாதேவியுடன் கலந்து கொண்டார். அப்போது கூட்டநெரிசலை பயன்படுத்தி சண்முகம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசாரிடம் புகார் கூறினார்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் வல்லநாடு, தெய்வசெயல்புரம், நெல்லை டவுண் பகுதிகளை சேர்ந்த மேலும் 13 பெண்கள் தாங்கள் அணிந்திருந்த நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டதாக புகார் கொடுத்தனர். மேலும் பல பெண்களிடமும் நகை பறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். மொத்தம் 13 பெண்களிடம் 100 பவுன் நகைகள் பறிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கு மேல் ஆகும். இதையடுத்து போலீசார் அங்கு அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அபி, சிவந்தி மற்றும் திவ்யா என்ற 3 பெண்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி நகைகளை பறிகொடுத்த பெண்கள் கூறும் போது, கும்பாபிஷேகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிப்பதாக போலீசார் கூறினர். ஆனாலும் இன்று பல பெண்களிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு போலீசாரின் கவனக்குறைவு, குளறுபடிகளே காரணம் என குற்றம் சாட்டினர்.


    Next Story
    ×