search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தை முட்புதரில் சிக்கி பிணமாக கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தை முட்புதரில் சிக்கி பிணமாக கிடப்பதை படத்தில் காணலாம்.

    அரியலூர் பகுதியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 2½ வயது குழந்தை பிணமாக மீட்பு

    அரியலூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியான குழந்தையின் உடலை இன்று காலை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மீட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    திருச்சி மாவட்டம் தாராநல்லூரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 32). இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள். இதில் 3-வது குழந்தை ஜெனிகாசினி (2½).

    இந்நிலையில் அலெக்ஸ் தனது மனைவி சந்தியா, மகள் ஜெனிகாசினி ஆகியோருடன் நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து அரியலூர் மாவட்டம் வாரியங்காவலில் உள்ள சந்தியாவின் தாயார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக வி.கைகாட்டியை அடுத்த நெறிஞ்சிகோரை அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் வழியாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாலத்தின் மேல் பகுதியிலும் வெள்ளம் சென்று கொண்டிருந்தது.

    அந்த பாலம் வழியாக அலெக்ஸ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். அப்போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது அங்குள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியது. இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில், அதில் இருந்த 3 பேரும் கீழே விழுந்தனர். குழந்தை ஜெனிகாசினி காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாள்.

    அலெக்ஸ் மற்றும் சந்தியா ஆகியோர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பாலம் வழியாக சென்ற லாரியில் இருந்த கயிறு மூலம் 2 பேரையும் மீட்டனர். மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தை ஜெனிகாசினியை தேடும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆனால் குழந்தையை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து அரியலூர் தீயணைப்பு நிலையம் மற்றும் கயர்லாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு அரியலூர் எஸ்.பி. அபினவ்குமார் தலைமையிலான போலீசாரும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அங்கேயே முகாமிட்டு தேடியும் குழந்தையை மீட்க முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை பாலத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள முட்புதரில் குழந்தை ஜெனிகாசினி பிணமாக கிடந்தாள். உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் சென்று குழந்தை உடலை மீட்டு வந்தனர். காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×