search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி தங்க கோபுரம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
    X
    பழனி தங்க கோபுரம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    நாளை சுதந்திர தின விழா: பழனி கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

    சுதந்திர தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    பழனி:

    இந்திய சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சுற்றுலா தலங்கள், முக்கிய வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இதைபயன்படுத்தி அசம்பாவித சம்பவங்கள் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாளை கலெக்டர் வினய் தேசிய கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பழனி முருகன் கோவிலுக்கு தொடர் விடுமுறை என்பதால் கடந்த 2 நாட்களாக அதிக அளவு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு இங்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பப்படுகின்றனர். மலைக் கோவில் உள்பட அடிவாரம், சன்னதி, கிரி வீதி, ரோப்கார் நிலையம் ஆகிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மோப்பநாய் கொண்டு வெடிகுண்டு சோதனை நடத்தவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

    திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய அனைத்து பகுதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் இன்றும் நாளையும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Next Story
    ×