search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை வேனில் ஏற்றிய போது எடுத்த படம்.
    X
    கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை வேனில் ஏற்றிய போது எடுத்த படம்.

    என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட முயற்சி: வேல்முருகன் உள்பட 1000 பேர் கைது

    26 நாட்கள் வேலை வழங்க வலியுறுத்தி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 1,000 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சுரங்கம் 1-ஏ பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நாட்களை 26-ல் இருந்து 19 நாட்களாக என்.எல்.சி. நிர்வாகம் குறைத்தது.

    இதனை கண்டித்தும், மீண்டும் 26 நாட்கள் பணி வழங்க கோரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக புதுவையில் உள்ள உதவி தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் அதிகாரி கணேசன் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையொட்டி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 26 நாட்கள் வேலை வழங்கக்கோரி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை இன்று (24-ந் தேதி) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தொழிற் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை நெய்வேலி ஸ்டோர் ரோடு பகுதியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். அங்கிருந்து அவர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தொடங்கி வைத்து பேசினார்.

    ஊர்வலம் நெய்வேலி நேரு சிலை அருகே சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெய்வேலி துணைபோலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையிலான 150-க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதை மீறி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 1,000 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
    Next Story
    ×