search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வளர்மதி
    X
    வளர்மதி

    குண்டர் சட்டத்தில் கைதானதால் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவி தற்காலிக நீக்கம்

    சேலத்தில் குண்டர் சட்டத்தில் கைதானதால் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவியை தற்காலிகமாக நீக்கம் செய்து, பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் வளர்மதி (வயது 23). பி.எஸ்சி. பட்டம் பெற்று, தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சேலம் பொன்னம்மாபேட்டை தில்லைநகரை சேர்ந்தவர் ஜெயந்தி (39). இவர் வளர்மதி தோழியின் தாயார் ஆவார்.

    இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி வளர்மதி, ஜெயந்தி ஆகியோர் சேலம் கோரிமேட்டில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி கல்லூரி முன்பு மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில், நெடுவாசலில் கொண்டுவரப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், கதிராமங்கலத்தில் போராடிய கிராம மக்களை காவல்துறை கைது செய்ததை எதிர்த்தும், இதற்காக நடக்க உள்ள போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து கன்னங்குறிச்சி போலீசார் வளர்மதி, ஜெயந்தி ஆகியோரை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் ஜெயந்தி மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் வளர்மதி கோவையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஏற்கனவே மாவோயிஸ்டு தொடர்பில் உள்ளவர் என்றும், சேலத்தை சேர்ந்த மாவோயிஸ்டு பழனிவேலு ஆதரவாளராக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாணவியை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு போலீசார் கடிதம் மூலம் தெரிவித்தனர். அதன்பின்பு பல்கலைக்கழக நிர்வாக குழு சார்பில் மாணவி தொடர்ந்து படிப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

    முடிவில் வளர்மதி, மாணவிகளை போராட தூண்டியதற்காகவும், மாவோயிஸ்டு இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் உள்ள புகாரின் பேரிலும், மாணவியை குண்டர் சட்டத்தில் கைது செய்து இருப்பதாலும் பல்கலைக்கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்ய குழுவில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவி வளர்மதியை தற்காலிகமாக நீக்கம் செய்து பதிவாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.



    Next Story
    ×