search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானூர் அருகே அய்யனார் கோவில் சிலை உடைப்பு: உண்டியல் கொள்ளை
    X

    வானூர் அருகே அய்யனார் கோவில் சிலை உடைப்பு: உண்டியல் கொள்ளை

    வானூர் அருகே அய்யனார் கோவில் சிலையை உடைத்து அங்கு இருந்த உண்டியலை மர்ம மனிதர்கள் தூக்கிக்கொண்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது எறையூர். இந்த பகுதியின் எல்லையோரம் அய்யனார் கோவில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டது.

    கோவிலில் பூசாரியாக கேசவன் உள்ளார். அவர் நேற்று மாலை கோவிலில் பூஜைகள் முடிந்து வீட்டுக்கு சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நேற்று இரவு கோவிலின் மதில் சுவர் ஏறி கோவில் வளாகத்துக்குள் சென்றனர். அங்கு இருந்த உண்டியலை அலேக்காக தூக்கினர்.

    பின்னர் 12 அடி உயர அய்யனார் சிலை, 2 குதிரை சிலைகளை உடைத்தனர். இதையடுத்து அங்கு இருந்து உண்டியலுடன் தப்பி ஓடி விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி கேசவன் கோவில் வளாகத்தில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டு, உண்டியல் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பொதுமக்களுக்கு தகவல் கூறினார். உடனே அவர்கள் கோவிலுக்கு விரைந்து வந்தனர்.

    இந்த கொள்ளை தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் வானூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் திருமேனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் எறையூர் பகுதியில் இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சிலர் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது.

    அந்த மர்ம மனிதர்கள்தான் கோவில் உண்டியலை கொள்ளையடித்து, சிலைகளை சேதப்படுத்தினார்களா? அல்லது வேறு யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×