search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வுடன் சேரலாம்: நாஞ்சில் சம்பத்
    X

    ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வுடன் சேரலாம்: நாஞ்சில் சம்பத்

    அ.தி.மு.க.வில் குழப்பதை ஏற்படுத்த நினைப்பதை விட பாரதிய ஜனதாவில் இணைவது ஓ.பி.எஸ்க்கு நல்லது என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
    தூத்துக்குடி:

    டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் அ.தி.மு.க (அம்மாஅணி) சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

    அ.தி.மு.க.வை ஜெயலலிதா வழி நடத்தி செல்ல பெரும் பங்காற்றியவர் சசிகலா. ஆனால் கட்சியிலோ, ஆட்சியிலோ அவர் ஆர்வம் காட்டவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அரசியலுக்கு வர வாசல் அமைத்து கொடுத்தவர் சசிகலா. ஆனால் அ.தி.மு.க.வையும் சசிகலாவையும் அழிக்க பார்க்கிறார் ஓ.பி.எஸ். அ.தி.மு.க தொண்டர்களுக்கு மனஉளைச்சலையும் ஏற்படுத்திகிறார். ஜெயலலிதா இறந்த பிறகு பல மூத்த நிர்வாகிகள் இணைந்து சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் வரவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

    ஆனால் திடீரென பாரதிய ஜனதாவிடம் அடிபணிந்து சசிகலாவை எதிர்க்கின்றனர். அ.தி.மு.க.வில் குழப்பதை ஏற்படுத்த நினைப்பதை விட பாரதிய ஜனதாவில் இணைவது ஓ.பி.எஸ்க்கு நல்லது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு 123 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிக்கிறது. இதனால் அவர் ஆதரவு தேவையில்லை.

    மத்திய அரசு மனிதனை விட்டுவிட்டு மாடுகளுக்கு ஆதார்அட்டை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்கியுள்ள நிலையில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது. சிறுபான்மை இன மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கை ஆகும். யார் என்ன உணவு உண்ண வேண்டும் என்பது அவர்களது தனிப்பட்ட உரிமை இந்த விசயத்தில் அரசு அதிகாரம் செலுத்தக் கூடாது.

    எனவே மோடி தலைமையிலான மத்திய அரசு இதை திரும்ப பெறவேண்டும். இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். எந்த ஒரு வழக்கிலும் லஞ்சம் வாங்கியவர்களைதான் போலீசார் கைது செய்வார்கள். ஆனால் டெல்லி போலீசார் முதன் முறையாக லஞ்சம் கொடுத்ததாக தினகரனை கைது செய்து இருக்கிறார்கள். இது திட்டமிட்ட சதி அவருக்கு ஜாமீன் வழங்காமல் வழக்கு விசாரணையையும் இழுத்தடிக்கிறார்கள். கட்சியை ஜெயலலிதா வழியில் நடத்த தகுதி படைத்தவர்கள் சசிகலாவும், தினகரனும் தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பேசுகையில்,” ஜெயலலிதா மறைவுக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று ஓ.பி.எஸ். கேட்கிறார். அம்மா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது இவர்தான முதல்வர் பொறுப்பில் இருந்தார். ஜெயலலிதா மறைந்த பிறகும் இவர்தானே முதல் அமைச்சராக இருந்தார். இப்போது விசாரணை வேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம். சசிகலா அனுமதியோடு ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற படங்கள், வீடியோவை வெளியிடுவோம்“ என்றார்.
    Next Story
    ×