search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் உலகக் கோப்பை: ஜிம்பாப்வேயை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
    X

    ஜூனியர் உலகக் கோப்பை: ஜிம்பாப்வேயை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

    ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. #U19WorldCup
    வெலிங்டன்:

    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.

    குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி  பெற்றுள்ள நிலையில் இன்று கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷம்பா 36 ரன்கள் எடுத்தார். மாதவீர் (30), ரோச் (31) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

    இந்தியா தரப்பில் ஏ.எஸ்.ராய் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.


    இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் தேசாய், ஷப்மன் கில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்டதுடன், வெற்றி இலக்கையும் நெருங்கினர். 8 பந்துவீச்சாளர்களை மாறி மாறி களமிறக்கியபோதிலும் இந்த ஜோடியைப் பிரிக்க ஜிம்பாப்வே அணியால் முடியவில்லை.

    இறுதியில் இந்த ஜோடி 21.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 88 பந்துகளை எதிர்கொண்ட ஷப்மன் கில் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 90 ரன்களும், தேசாய் 88 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது. காலிறுதிச் சுற்றுக்கும் முன்னேறியது. #U19WorldCup
    Next Story
    ×