search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷிரேயாஸ் அய்யருக்கு பாராட்டு: கூட்டு முயற்சியால் வென்றோம் - ரோகித்சர்மா
    X

    ஷிரேயாஸ் அய்யருக்கு பாராட்டு: கூட்டு முயற்சியால் வென்றோம் - ரோகித்சர்மா

    ஷிரேயாஸ் அய்யர் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது எனவும் வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த தொடரை வென்றதாகவும் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியுள்ளார்.
    விசாகப்பட்டினம்:

    இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் 215 ரன்னில் சுருண்டது. உபுல்தரங்கா அதிகபட்சமாக 95 ரன்னும், சமரவிக்ரமா 42 ரன்னும் எடுத்தனர். யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் தவான் அபாரமாக ஆடி 12-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 85 பந்தில் 100 ரன்னும் (13 பவுண்டரி, 2 சிக்சர்) ஷிரேயாஸ் அய்யர் 63 பந்தில் 65 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. தர்மசாலாவில் நடந்த முதல் போட்டியில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 141 ரன் வித்தியாசத்திலும் வென்று இருந்தன. தொடர்ச்சியாக 8-வது தொடரை வென்று முத்திரை பதித்தது.



    இந்திய அணி டெஸ்ட் தொடரை ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    கேப்டனாக இருந்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தர்மசாலாவில் நடந்த முதல் போட்டியில் நாங்கள் மோசமாக தோற்றோம். அதில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றி உள்ளோம்.

    முதல் போட்டி எனக்கு சோதனையாக இருந்தது. 2-வது போட்டியில் ரன்களை குவித்தோம். இந்த போட்டியை வென்றதன் மூலம் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். இனி 20 ஓவர் போட்டியிலும் கவனம் செலுத்துவோம்.

    வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த தொடரை வென்றோம். ஷிரேயாஸ் அய்யர் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. பேட்டிங்கில் பல்வேறு எண்ணங்களை கொண்டவர். பயம் இல்லாமல் சிறப்பாக ஆடுகிறார்.



    இந்திய அணி இதே உத்வேகத்துடன் விளையாடி வெளிநாட்டு மண்ணிலும் தொடரை வெல்ல வேண்டும். வெளிநாட்டில் வெற்றி பெறுவது அவசியமானதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 20-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.
    Next Story
    ×