search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்: 59 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிப்பு
    X

    ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்: 59 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிப்பு

    ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து முதலில் விளையாடி வருகிறது. 59 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
    பிரிஸ்பேன்:

    ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். ஆஷஸ் கவுரவத்துக்காக எதையும் இழக்கத் தயார் என்கிற ரீதியில் இரு அணிகளும் களத்தில் ஆக்ரோஷமாக மல்லுக்கட்டி நிற்பார்கள். இதனால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. 4 ஆண்டுகள் இடைவெளிக்குள் தலா ஒரு முறை இவ்விரு நாடுகளிலும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடக்கும். கடைசியாக 2015-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடரில் இங்கிலாந்து அணி 3-2 கணக்கில் வென்று இருந்தது.

    இந்நிலையில், ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது.

    இந்த முறை சொந்த மண்ணில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை நையப்புடைக்கும் உத்வேகத்துடன் காத்திருக்கிறது. காயத்தில் இருந்து மீண்ட மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட் அணிக்கு திரும்பியிருப்பது ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்தியுள்ளது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் வார்னர், பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் ஆகியோர் உடற்தகுதி பெற்றிருப்பதால் அவர்கள் ஆடும் லெவனில் இடம்பெற்றனர்.

    ஆஸ்திரேலிய அணி:  டேவிட் வார்னர், கேமரான் பான்கிராப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஷான் மார்ஷ், டிம் பெயின், மிட்செல் ஸ்டாக், ஜோஷ் ஹசில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லயோன்.

    இங்கிலாந்து அணி: அலைஸ்டர் குக், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), டேவிட் மாலன், மொயீன் அலி, ஜோனி பெர்ஸ்டோவ், கிறிஸ் வோக்கர்ஸ், ஸ்டுவார்ட் பிராட், ஜிம்மி ஆண்டர்சன், ஜேக் பால்.

    துவக்க வீரர்களாக அலைஸ்டர் குக், ஸ்டோன்மேன் களமிறங்கினர். நிதானமாக ஆடிக்கொண்டிருந்த குக், 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.



    அதன்பின் வின்ஸ் களமிறங்கினார். அவர் ஸ்டோன்மேனுடன் இணைந்து கவனமாக பந்துகளை எதிர்கொண்டு விளையாடினார். அவ்வப்போது பவுண்டரிகளும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.



    இந்நிலையில், அணியின் ஸ்கோர் 1 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஸ்டோன்மேன் 25 ரன்களும், வின்ஸ் 32 ரன்களும் எடுத்திருந்தனர்.
    Next Story
    ×