search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை 2-வது தகுதி சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இறுதிப்போட்டியில் நுழையுமா?
    X

    நாளை 2-வது தகுதி சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இறுதிப்போட்டியில் நுழையுமா?

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
    நெல்லை:

    2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் ‘லீக்’ ஆட்டம் கடந்த 14-ந் தேதி முடிவடைந்தது.

    இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    திருவள்ளூர் வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட் ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    பிளேஆப் சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னையில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் (குவாலிபையர் 1) நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    திண்டுக்கல்லில் நேற்று நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணி 2-வது தகுதி சுற்றுக்கு நுழைந்தது. காரைக்குடி அணி வெளியேற்றப்பட்டது.

    இன்று ஓய்வு நாளாகும். 2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) நெல்லை ஐ.சி.எல். மைதானத்தில் நாளை (18-ந்தேதி) நடக்கிறது.

    இதில் ஆர்.சதீஷ் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- முரளி விஜய் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இறுதிப்போட்டிக்கு 2-வது முறையாக நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணியை ஏற்கனவே சென்னையில் நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மிகுந்த நம்பிக்கையுடன் கோவை அணியை சந்திக்கும்.

    தூத்துக்குடி அணிக்கு எதிரான ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தவில்லை. பேட்டிங்கும், பந்துவீச்சும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நாளைய போட்டியில் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமானது.

    கோவை கிங்ஸ் அணி எல்லா வகையிலும் சவாலாக விளங்கக்கூடியது. கடைசி 3 ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சர்வதேச வீரரான முரளி விஜய் அந்த அணியில் இருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் இறுதிப்போட்டிக்குள் நுழைய கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Next Story
    ×