search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி அணியை சாய்த்து காரைக்குடி காளை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி அணியை சாய்த்து காரைக்குடி காளை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற்றம்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சி அணியை வீழ்த்தி காரைக்குடி காளை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    நத்தம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சி அணியை வீழ்த்தி காரைக்குடி காளை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    8 அணிகள் இடையிலான தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் திண்டுக்கல் நத்தத்தில் நேற்றிரவு அரங்கேறிய 24-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சும், காரைக்குடி காளையும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த திருச்சி கேப்டன் பாபா இந்த்ராஜித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இதன்படி பாபா இந்த்ராஜித்தும், பரத்சங்கரும் திருச்சி அணியின் இன்னிங்சை தொடங்கினர். யோகேஷ்வர் வீசிய முதல் ஓவரிலேயே பரத்சங்கர் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். மறுமுனையில் இந்த்ராஜித் 2 ரன்னில் வெளியேற்றப்பட்டார். அடுத்து வந்த ஆதித்யா கிரிதர் 27 ரன்களில் கேட்ச் ஆனார்.



    இதன் பின்னர் பரத்சங்கருடன், அகில் ஸ்ரீநாத் ஜோடி சேர்ந்தார். இதன் பிறகு தான் திருச்சி அணியின் வாணவேடிக்கை ஆரம்பித்தது. பரத்சங்கர் நாலாபுறமும் பந்துகளை விளாசி ரன்மழை பொழிந்தார். காரைக்குடி பவுலர்களை ஓடஓட விரட்டியடித்த அவர் 19-வது ஓவரில் சிக்சர், பவுண்டரியுடன் சதத்தை நிறைவு செய்து அசத்தினார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பதிவான 3-வது சதம் இதுவாகும். இந்த சீசனில் எடுக்கப்பட்ட 2-வது சதமாகும். ஏற்கனவே தூத்துக்குடி வீரர் வாஷிங்டன் சுந்தர் (107 ரன்) சதம் அடித்திருந்தார்.

    பரத்சங்கரின் கலக்கலான பேட்டிங்கால் திருச்சி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. 23 வயதான பரத்சங்கர் 112 ரன்களுடன் (68 பந்து, 10 பவுண்டரி, 7 சிக்சர்), அகில் ஸ்ரீநாத் 37 ரன்களுடனும் (25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். இருவரும் கடைசி 6 ஓவர்களில் மட்டும் 92 ரன்களை திரட்டினர்.

    தொடர்ந்து களம் புகுந்த காரைக்குடி வீரர்கள் பதிலடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் விஷால் வைத்யா (40 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), அனிருதா (60 ரன், 42 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) இருவரும் அதிரடி காட்டி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். அடுத்து வந்த வீரர்கள் காரைக்குடி அணியை முன்னெடுத்து சென்று இலக்கை எட்ட வைத்தனர்.

    காரைக்குடி அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷாஜகான் 39 ரன்களுடனும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), கணபதி 20 ரன்களுடனும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். 4-வது வெற்றியை சுவைத்த காரைக்குடி அணி இதன் மூலம் ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்தது.

    இந்த ஆட்டத்தில் இரு அணிகளையும் சேர்த்து மொத்தம் 21 சிக்சர்கள் நொறுக்கப்பட்டன. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இது தான். மேலும் அதிகபட்ச ‘சேசிங்’ ஸ்கோராகவும் இது அமைந்தது. 
    Next Story
    ×