என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் அரையிறுதி போட்டி: இங்கிலாந்து - பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை
    X

    முதல் அரையிறுதி போட்டி: இங்கிலாந்து - பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன.
    கார்டிப்:

    8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.

    அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    அரையிறுதி போட்டி நாளை தொடங்குகிறது. கார்டிப்பில் நடக்கும் முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து, ‘பி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.



    இங்கிலாந்து ‘லீக்’ ஆட்டத்தில் தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணியில் கேப்டன் மார்கன், ஜோரூட், ஹால்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொய்ன்அலி, மார்க்வுட், புளுங்கெட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    ஜோரூட் 3 ஆட்டத்தில் 212 ரன்னும், மார்கன் 175 ரன்னும் எடுத்து உள்ளனர். அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்கு சாதகமாக கருதப்படுகிறது.

    அந்த அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளது. ஏற்கனவே 2004, 2013-ம் ஆண்டு தகுதி பெற்று இருந்தது. ஆனால் 2 முறையும் கோப்பையை இழந்தது. இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு நுழைந்து கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.



    சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி ‘லீக்’ ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றது. அதன்பின் எழுச்சி பெற்று தென்னாப்பிரிக்கா, இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    அந்த அணியில் அசார் அலி, பஹர் ஜமான், பாபர் ஆசம், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது அமீர், இமாத்வாசிம், அசன்அலி, ஜூனைத்கான் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    பாகிஸ்தான் அணி பேட்டிங்கைவிட பந்துவீச்சிலேயே சிறந்து காணப்படுகிறது. கணிக்க முடியாத அணி என்று வர்ணிக்கப்படும் அந்த அணி அதற்கு ஏற்றால்போல் தென்னாப்பிரிக்கா, இலங்கையை வீழ்த்தியது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

    பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்கும் முனைப்பில் உள்ளது. இதுவரை பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கிடையாது. 3 முறை அரையிறுதி வரை வந்துள்ளது. முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இப்போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
    Next Story
    ×