search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் 7-ந் தேதி நடக்கிறது
    X

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் 7-ந் தேதி நடக்கிறது

    ஐ.சி.சி. வருவாய் பகிர்வு விவகாரம் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் மே 7-ந் தேதி நடக்கிறது.
    மும்பை:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) வருவாய் பகிர்வில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையை மாற்றி மீண்டும் பழைய முறையை கடைப்பிடிப்பது என்று சில மாதங்களுக்கு முன்பு கொள்கை ரீதியாக முடிவு செய்யப்பட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஐ.சி.சி. தனது முடிவில் இருந்து பின்வாங்க மறுத்து விட்டது. தங்களது எதிர்ப்புக்கு ஆதரவு திரட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த முயற்சி கைகூடவில்லை. இந்தியாவுக்கு, இலங்கை கிரிக்கெட் வாரியம் மட்டுமே ஆதரவு கரம் நீட்டியது.

    இது குறித்து துபாயில் கடந்த புதன்கிழமை நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் இந்தியா, இலங்கை தவிர மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஆதரவுடன் வருவாய் பகிர்வு முறையில் மாற்றம் செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    வருமான பகிர்வு விதிமுறை மாற்றம் செய்து இருப்பதன் மூலம் அடுத்த 8 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி.யிடம் இருந்து கிடைக்கும் வருவாயில் பெருத்த அடி விழுந்துள்ளது. அதாவது மொத்தம் ரூ.1,775 கோடி இழப்பு ஏற்படும். வருவாய் இழப்பு மற்றும் நிர்வாக அமைப்பில் தங்களது அதிகாரம் பறிபோவதால் ஐ.சி.சி.-இந்திய கிரிக்கெட் வாரியம் இடையிலான பனிப்போர் முற்றி இருக்கிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஐ.சி.சி. விவகாரம் குறித்து மட்டும் விவாதிக்கப்பட இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தில் செயல் தலைவர் சி.கே.கண்ணா நேற்று தெரிவித்தார்.


    இங்கிலாந்தில் ஜூன் 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் அறிவிக்கும் காலக்கெடு (ஏப்ரல் 25-ந் தேதி) முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணி மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த பிரச்சினை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

    சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்று நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் விரும்புகிறார்கள். மற்றொரு தரப்பினர் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
    Next Story
    ×