search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தாக்குதல் தின நிகழ்ச்சியில் சந்திப்பு: ராகுலுக்கு பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்து
    X

    பாராளுமன்ற தாக்குதல் தின நிகழ்ச்சியில் சந்திப்பு: ராகுலுக்கு பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்து

    பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ராகுல் காந்திக்கு பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மீது கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந்தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ-முகமது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

    இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் 5 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் தொடர்பாக அப்சல் குரு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டு விசாரணைக்கு பிறகு 3 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் அப்சல் குரு தூக்கில் போடப்பட்டான்.

    பாராளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலை நினைவு கூறும் வகையில், பாராளுமன்ற வளாகத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்காக நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 13-ந்தேதி அனைத்து கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

    அதன்படி இன்று பாராளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் 16-வது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முதலில் அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களை தொடர்ந்து பா.ஜ.க., காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்த வந்தனர்.


    அப்போது காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், ரவி சங்கர் பிரசாத் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். பா.ஜ.க. மத்திய மந்திரிகளில் பலரும் ராகுல் காந்திக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    முன்னதாக நினைவிட பகுதிக்கு பிரதமர் மோடி வந்த போது அங்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

    பிறகு மன்மோகன் சிங் அருகில் சென்று நலம் விசாரித்தார். அவரது கையை பிடித்து குலுக்கி பிரதமர் மோடி அன்பை வெளிப்படுத்தினார். பிறகு அவர்கள் மொத்தமாக சென்று உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது கடந்த ஞாயிற்றுக்கிழமை பொது கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் தூதரும் ரகசியமாக சந்தித்து குஜராத் தேர்தலை பற்றி பேசினார்கள் என்று குற்றம் சாட்டி இருந்தார். அதை மறுத்த மன்மோகன் சிங் பிரதமர் மோடி பேசுவதில் உண்மை இல்லை என்று பதிலடி கொடுத்தார்.

    மோடியின் குற்றச்சாட்டுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இந்த நிலையில் மன்மோகன் சிங்கை பார்த்ததும் பிரதமர் மோடி கை குலுக்கி நலம் விசாரித்தது அனைத்து தரப்பினரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×