search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ கவுன்சிலில் முறைகேடு: நீதிபதிகளை விசாரிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
    X

    மருத்துவ கவுன்சிலில் முறைகேடு: நீதிபதிகளை விசாரிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

    இந்திய மருத்துவ கவுன்சில் முறைகேட்டில் நீதிபதிகளை விசாரிக்க கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்தும், மனுதாரருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    நீதித்துறையில் பொறுப்புடைமைக்கான பிரசாரம் மற்றும் சீர்திருத்தங்கள் என்னும் தொண்டு நிறுவனம் சார்பில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், ‘இந்திய மருத்துவ கவுன்சில், மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் பெரும் அளவில் முறைகேடு நடந்து உள்ளது. இதில் இரு தரப்பினரின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் நீதிபதிகள் சிலரும் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். எனவே இதுபற்றி சிறப்பு விசாரணை குழு அமைத்து முழுமையாக விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.



    இந்த மனு நீதிபதி ஆர்.கே. அகர்வால், அருண்மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, இந்த மனுவில் எந்த தகுதியும் இல்லை. எனவே இதை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறினார். மேலும் மனுவை தாக்கல் செய்த அமைப்புக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.



    கடந்த வாரம் மூத்த வக்கீல் காமினி ஜெய்ஷ்வால் தாக்கல் செய்த இதேபோன்ற மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது, குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×