search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி அருகே ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளுடன் சீன வியாபாரி, சென்னை வாலிபர் கைது
    X

    திருப்பதி அருகே ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளுடன் சீன வியாபாரி, சென்னை வாலிபர் கைது

    திருப்பதி அருகே ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளுடன் சீன வியாபாரி மற்றும் சென்னை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமலை:

    திருவள்ளூர் அருகே உள்ள தொழிற்பேட்டை குடோன் ஒன்றில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த திருப்பதி போலீசார் இது தொடர்பாக குடோன் உரிமையாளர் அவரது மகன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த நாகூர் மீரான் மற்றும் சீனாவை சேர்ந்த லின்வின்புன் ஆகியோரை திருப்பதி அருகே உள்ள ஏர்பேடில் நேற்று கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதில் சீனாவை சேர்ந்த லின்வின்புன், ஆபரணக்கற்கள் வியாபாரம் என்ற பெயரில் விசா பெற்று இந்தியாவுக்கு வந்து ஹவாலா மூலம் பணம் அனுப்பி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    கைது செய்யப்பட்ட நாகூர்மீரான் என்பவரின் தந்தை மகமத்தும் செம்மரக் கடத்தல் வியாபாரி. அவர் இப்போது மலேசியாவில் இருக்கிறார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருப்பதி போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி அடுத்த நாயுடுபேட்டை- பூதலப்பட்டு நெடுஞ்சாலையில் 4 குழுக்களாக நேற்று ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வேன் வேகமாக வந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்தும் வேன் நிற்காமல் வேகமாக சென்றது.

    இதையடுத்து சினிமாவில் வருவது போல் வேனை போலீசார் துரத்தி சென்றனர். சுமார் 45 நிமிடம் துரத்தி சென்று ராமானுஜபள்ளி சோதனைச்சாவடி அருகே வேனை மடக்கி பிடித்தனர்.

    வேனில் இருந்த டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கண்ணமங்கலத்தை அடுத்த இரும்பேலியை சேர்ந்த சங்கர் என்பவரையும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் வேனையும், அதில் இருந்த 82 செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×