search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் நடந்த ஒற்றுமை ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    X

    வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் நடந்த ஒற்றுமை ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    சர்தார் வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்தநாளையொட்டி ஒற்றுமை ஓட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். இதில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    புதுடெல்லி:

    சர்தார் வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்தநாளையொட்டி ஒற்றுமை ஓட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். இதில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இந்தியாவின் இரும்பு மனிதர் என்று பெயர் பெற்றவர், குஜராத் மாநிலத்தில் பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவின் முதல் துணை பிரதமராக பதவி வகித்த அவர், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அனைத்து குறுநில அரசுகளையும் இந்திய அரசுடன் இணைக்க அரும்பாடு பட்டவர்.



    வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்தநாளையொட்டி (அக்டோபர் 31-ந்தேதி) நாடு முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெறும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். இதையொட்டி டெல்லியில் உள்ள தயான் சந்த் மைதானத்தில் இருந்து 1.5 கி.மீ. தூர ஒற்றுமைக்கான ஓட்டத்தை பிரதமர் மோடி நேற்று காலை 11.44 மணி அளவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர், பிரபல விளையாட்டு வீரர்கள் சர்தார் சிங்(ஹாக்கி), சுரேஷ் ரைனா(கிரிக்கெட்), வீராங்கனைகள் தீபா கர்மாகர்(ஜிம்னாஸ்டிக்ஸ்), கர்ணம் மல்லேஸ்வரி(பளுதூக்குதல்) உள்பட ஆயிரக்கணக் கானோர் பங்கேற்று உற்சாகத்துடன் ஓடினர். இந்த ஓட்டம் இந்தியா கேட் அருகே முடிவடைந்தது.

    ஒற்றுமை ஓட்டத்தை தொடங்கி வைத்து மோடி பேசும்போது, “சர்தார் பட்டேலின் பிறந்த நாளன்று அவருக்கு நாம் அனைவரும் அவருக்காக வீர வணக்கம் செலுத்துவோம். அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவையும், முக்கிய பங்களிப்பும் என்றுமே மறக்க முடியாதவை. நாடு சுதந்திரம் பெறுவதற்காக அவரது அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டும். நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது. அந்த பன்முகத்தன்மையில் ஒற்றுமை காண்பதுதான் நமது தனிச்சிறப்பு. இந்த ஓட்டத்தில் இளைய தலைமுறையினர் பெரும் அளவில் பங்கேற்றதை பார்த்து உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டார்.

    ஒற்றுமை ஓட்டத்தில் கலந்துகொண்ட வீராங்கனை தீபா கர்மாகர் கூறுகையில், “இதில் பங்கேற்று ஓடியது பெருமைப் படத்தக்க ஒன்று. ஏனென்றால் நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக இந்த ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

    முன்னதாக வல்லபாய் பட்டேலின் 142-வது பிறந்தநாளையொட்டி, பாராளுமன்ற சாலையில் அமைந்துள்ள அவருடைய சிலைக்கு கீழே பட்டேலின் திருஉருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

    அந்த படத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், “இந்தியாவை கட்டமைப்பதற்காக நாட்டின் ஒற்றுமைக்கும், பலத்துக்கும் வித்திட்டவர்களில் ஒருவரான இரும்பு மனிதருக்கு பிறந்தநாள் வீர வணக்கங்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இதேபோல் ஆம் ஆத்மி கட்சியும் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி அவரை நினைவு கூரும் விதமாக டுவிட்டரில் மரியாதை செலுத்தியது. 
    Next Story
    ×