search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்ப்பேன்: ராஜ் தாக்கரே
    X

    மும்பை புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்ப்பேன்: ராஜ் தாக்கரே

    மராட்டிய மாநிலம் மும்பையில் வரப்போகும் புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்ப்பேன் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மும்பை வரையிலான புல்லட் ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்றது. இந்த திட்டத்துக்கு ஜப்பான் நிதியுதவி அளிக்கிறது. இரு நாட்டு பிரதமர்களும் பங்கேற்று புல்லட் ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினர்.

    இந்நிலையில், மராட்டிய மாநிலத்துக்கு புல்லட் ரெயில் திட்டம் கொண்டு வந்தால் அந்த திட்டத்தை எதிர்ப்போம் என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பா.ஜ.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    ரெயில்வே துறையில் அடிப்படை வசதிகளை செய்து தராமல் புல்லட் ரெயில் திட்ட பணிகளை தொடங்குவதில் அர்த்தமில்லை. வரும் 5-ம் தேதிக்குள் ரெயில்வே நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்வதாக உறுதியளிக்க வேண்டும். இல்லையெனில் புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    மற்ற மாநிலங்களில் இருந்து வந்து குடியேறியவர்களால் மும்பை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. மேலும், அதிகரித்து வரும் குடிமக்களுக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்து தரவில்லை.

    மேலும், மராட்டிய மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர். ஏற்கனவே எங்கள் கட்சி பிரமுகர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×