search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசனை காங்கிரசுக்கு அழைக்கமாட்டோம்: குஷ்பு
    X

    கமல்ஹாசனை காங்கிரசுக்கு அழைக்கமாட்டோம்: குஷ்பு

    ‘காங்கிரசுக்கு வாருங்கள் என்று கமல்ஹாசனை அழைக்க மாட்டோம்’ என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் குஷ்பு கலந்துகொண்டார்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தற்போது அரசாங்கமே இல்லை. விவசாயிகள் பிரச்சினை, நீட் பிரச்சினை என எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? தமிழகத்தை ஆள எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் மக்கள் தேர்ந்து எடுக்கவில்லை.

    18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியவர்கள், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த 11 எம்.எல்.ஏ.க்களை முன்பு ஏன் நீக்கவில்லை? இந்த விஷயத்தில் பின்னால் இருந்து பா.ஜனதா சதுரங்க வேட்டை ஆடுகிறது. பா.ஜனதா தமிழகத்துக்குள் நுழைய ஆசைப்படுகிறது. அ.தி.மு.க.வை அது ஏணியாக பயன்படுத்த நினைக்கிறது. ஆனால் அது நடக்காது.

    தமிழகத்தில் கவர்னர் தனது கடமையை செய்யவில்லை. வருகிற 4-ந்தேதிக்கு பிறகு அவர் என்ன செய்கிறார் என்பதை பார்த்து நாங்கள் கேள்வி கேட்போம். இந்த ஆட்சி நீடிக்குமா? இல்லையா? என்பது 4-ந்தேதிக்கு பிறகு தெரிந்து விடும்.

    நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே கேரள முதல்-மந்திரியை சந்தித்து இருக்கிறார். தற்போது டெல்லி முதல்-மந்திரியை சந்தித்து இருக்கிறார். ஒரு முதல்-மந்திரியே அவரை தேடிப்போய் சந்தித்து இருப்பதால், கமல்ஹாசனின் 30 ஆண்டுகால தோழி என்ற முறையில் எனக்கு பெருமையாக இருக்கிறது.

    கமல்ஹாசன் பிற கட்சியில் சேருவதும், புதிய கட்சி தொடங்குவதும் அவரது விருப்பம். காங்கிரசுக்கு வாருங்கள் என்று அவரை நாங்கள் கூப்பிட மாட்டோம். குஷ்புவை நம்பியோ, கமலை நம்பியோ, ரஜினிகாந்தை நம்பியோ காங்கிரஸ் இல்லை. தனது கொள்கையை நம்பித்தான் இருக்கிறது.

    கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கினால் அதில் நான் சேரமாட்டேன். அரசியலே வேண்டாம் என்று விலகினாலும், விலகுவேனே தவிர, இனி வேறு கட்சியில் சேர மாட்டேன். ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் எனது நிலைப்பாடு அதுதான். அரசியலில்தான் பேரும், புகழும் நான் அடைய வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே பணம், புகழ் எல்லாவற்றையும் பார்த்தவள் நான்.

    இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜனதா அரசு மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர். எனவே 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும். காங்கிரசுக்கு ராகுல்காந்தி தலைவராக வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தலைவர் பதவியை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருந்து அவர் வந்தபிறகு கண்டிப்பாக மாற்றம் வரும்.

    இவ்வாறு குஷ்பு கூறினார்.
    Next Story
    ×