search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அமித்ஷா புதிய கட்டளை
    X

    பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அமித்ஷா புதிய கட்டளை

    ஒவ்வொரு பா.ஜனதா நிர்வாகியும் குறைந்தது 50 வீடுகளுக்கு சென்று மோடி அரசின் சாதனைகளை விளக்கி கூற வேண்டும் என்று அமித்ஷா கூறி உள்ளார்.
    புவனேஸ்வர்:

    2019 பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தென் மாநிலங்கள் பா.ஜனதா கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.

    கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா இப்போது ஒடிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு 3 நாட்களாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    கடைசி நாளான நேற்று அவர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒடிசா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதா தொண்டர்களும், நிர்வாகிகளும் பாடுபட வேண்டும், இதன் மூலம் புதிய ஒடிசாவை உருவாக்க வேண்டும்.

    ஒடிசாவில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். வருகிற 2019-ம் ஆண்டு ஒடிசாவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் கட்சியை விட பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

    இதற்காக உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களில் கட்சி வளர்ச்சிக்கான முன்னோடி திட்டத்தை செயல்படுத்தினோம். அது அந்த மாநில தேர்தலில் கைகொடுத்தது. வெற்றி பெற்றோம். அது போல் ஒடிசாவில் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும்.

    பா.ஜனதாவின் எளிய மந்திரம் பிரதமர் மோடி. அவரது மக்கள் நல திட்டங்களை வீடு தோறும் சென்று விளக்கி பிரசாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நிர்வாகியும் குறைந்தது 50 வீடுகளுக்கு சென்று மோடி அரசின் சாதனைகளை விளக்கி கூற வேண்டும்.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் 36 ஆயிரம் பூத் கமிட்டிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×