search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை ஜனாதிபதி தேர்தலில் 98.21 சதவீத வாக்குப்பதிவு: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
    X

    துணை ஜனாதிபதி தேர்தலில் 98.21 சதவீத வாக்குப்பதிவு: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் 98.21 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10-ந் தேதி முடிவுக்கு வருகிறது. எனவே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

    இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, முன்னாள் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரியான வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காள முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.

    துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தனி அறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குச்சாவடியில் காலை 10 மணியளவில் தொடங்கியது. எம்.பி.க்கள் ஒவ்வொருவராக தங்கள் வாங்கினை பதிவு செய்தனர்.

    வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் பிரதமர் மோடி வாக்களித்தார். பகல் 12 மணியளவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்களித்தார். அவருடன் எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கோபால கிருஷ்ண காந்தியும் வந்திருந்தார். ஆனால், அவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாததால் வாக்களிக்கவில்லை.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மேலிடத் தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மொத்தம் உள்ள 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகின. இது 98.21 சதவீதம் ஆகும். பா.ஜ.க., காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சிகளைச் சேர்ந்த தலா 2 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை. இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 4 எம்.பி.க்கள், தேசியவாத காங்கிரசின் ஒரு எம்.பி. பா.ம.க. எம்.பி. ஒருவர் மற்றும் சுயேட்சை எம்.பி.க்கள் இரண்டு பேரும் வாக்களிக்கவில்லை. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×