search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்கில் போரில் வீரமரணமடைந்தவர்களுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி அஞ்சலி
    X

    கார்கில் போரில் வீரமரணமடைந்தவர்களுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி அஞ்சலி

    1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி அருண் ஜெட்லி இன்று அஞ்சலி செலுத்தினார்.

    புதுடெல்லி:

    கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி அருண் ஜெட்லி இன்று அஞ்சலி செலுத்தினார்.

    காஷ்மீரின் கார்கில் பகுதியை பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் இணைந்து கடந்த 1999–ம் ஆண்டு மே மாதம் ஆக்கிரமித்தனர். இதை அறிந்த இந்திய ராணுவம், அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. இரு தரப்பினருக்கும் இடையே சுமார் 2 மாதங்களாக நடந்த தீவிரப் போர், ஜூலை 26–ந்தேதி முடிவடைந்தது. 

    கார்கில் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்ததுடன், அப்பகுதியை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 

    ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் சுமார் 500 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

    கார்கில் போரின் 18–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு காஷ்மீரின் டிராஸ் பகுதியில் நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டு உள்ளது. 

    இந்நிலையில், டெல்லியில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் (அமர் ஜவான் ஜோதி) கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. 

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்பு மந்திரி அருண் ஜெட்லி, கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா, கடற்படை தளபதி சுனில் லம்பா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். 

    இதேபோல், காஷ்மீரின் டிராஸ் பகுதியில் நினைவுச்சின்னத்தில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் உறவினர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
    Next Story
    ×