search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண் குடிசையில் இருந்து மணிமகுடம் வரை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்து வந்த பாதை
    X

    மண் குடிசையில் இருந்து மணிமகுடம் வரை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்து வந்த பாதை

    நாட்டின் 14-வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ள ராம்நாத் கோவிந்த், மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்துள்ளார்.
    புதுடெல்லி:

    நாட்டின் 14-வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ள ராம்நாத் கோவிந்த், மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் புறநகர் மாவட்டத்தில் உள்ள பராவுங்க் கிராமத்தில் 1-10-1945 அன்று மிகவும் பின்தங்கிய ஏழைக் குடும்பத்தில் மகனாகப் பிறந்த இவருக்கு ஐந்து மூத்த சகோதரர்களும், இரு மூத்த சகோதரிகளும் உள்ளனர். மிகச்சிறிய மண் சுவரால் ஆன இவர்களது குடிசை வீடு தீக்கிரையானதில் ராம்நாத் கோவிந்தின் தாயார் பலியானபோது, இவரது வயது 5.

    தாயை இழந்த தனயனாக சகோதர-சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்த ராம்நாத் கோவிந்த், கல்வியின் மூலம் மட்டுமே வாழ்க்கையில் உயர்நிலையை அடைய முடியும் என்பதை சிறுவயதிலேயே உணர்ந்தார். கான்பூரில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு செல்வதற்கு சொந்தமாக சைக்கிள் வாங்க வழியில்லாத ஏழ்மை நிலையில் இருந்த ராம்நாத் கோவிந்த், தினந்தோறும் 6 கி.மீ. தூரம் நடந்து பள்ளிக்கு சென்று வந்தது கல்வியின் மீது இவருக்கு இருந்த காதலை விளக்குகிறது.

    கான்பூர் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்ற பின்னர், சட்டம் பயின்று வழக்கறிஞராகவும் மாறிய ராம்நாத் கோவிந்த், டெல்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக 1993 வரை திறம்பட செயல்பட்டு வந்துள்ளார். 30-5-1974 அன்று சவீதா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு, ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    1977-79 காலகட்டத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராக டெல்லி ஐகோர்ட்டில் பணியாற்றிய இவர், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனி உதவியாளராகவும் இருந்துள்ளார். மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவிகளையும் இவர் செய்து வந்துள்ளார். இதன்மூலம் சமூக சேவைக்கும் பெரும் பங்களிப்பு ஆற்றியுள்ளார்.

    1988ம் ஆண்டு பா.ஜ.க.வின் சிறுபான்மையினர் பிரிவான தலித் மோர்ச்சா அமைப்பின் தலைவராக செயலாற்றிய இவர், 1991-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து பூரண அரசியலில் களமிறங்கினார்.

    1994-ம் ஆண்டு பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராம்நாத் கோவிந்த், 12 ஆண்டுகள் இப்பதவியில் திறம்பட செயலாற்றி பல்வேறு மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து அவற்றுக்கு தீர்வு காண முயன்றுள்ளார். எம்.பி. பதவிக்காலம் முடிந்தபின்னர் 2015-ம் ஆண்டு பீகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

    பா.ஜ.க.வின் சித்தாந்தத்துடன் நேர்மாறான கருத்துடைய நிதிஷ் குமார் ஆட்சிக்கு இவர் அளித்து வந்த ஆதரவு விருப்பு வெறுப்பற்ற அரசியல்வாதி என்ற நற்பெயரை ஏற்படுத்தி தந்தது.

    கடந்த மாதம் வரை பீகார் மாநில கவர்னர் என்னும் மிகச்சிறிய அடையாளத்தைத் தவிர வேறு எவ்வித விளம்பர வெளிச்சமும் பட்டறியாத ராம்நாத் கோவிந்த், அனைத்து தரப்பினரையும் கவர்ந்ததாக இருந்ததால் இவரை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி பதவி வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்தது. தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்ற தனிப்பட்ட அடையாளமும் இவரது வெற்றிக்கு பெருந்துணையாக இருந்துள்ளது. இதனால்தான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமாரை விட சுமார் 7 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று இவரால் வெற்றி பெற முடிந்தது.



    முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கும் இரண்டாவது தலித் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் மிக எளிமையாக இவர் தெரிவித்த கருத்து மக்கள் அனைவரையும் கவர்ந்தது. ‘நாட்டின் மிக உயர்ந்த இந்தப் பதவியை நான் எந்த காலத்திலும் நினைத்துப்பார்த்ததில்லை. எனது இலக்காகவும் இது இருந்ததில்லை. எனது வெற்றி இந்திய ஜனநாயகத்தின் உயர்வுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியின்மூலம் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக மிக எளிமையான மக்கள் பிரதிநிதியாக, குறிப்பாக ஏழை எளிய மக்களின் பிரதிநிதியாக நான் செயல்படுவேன்’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அந்த வார்த்தைகளை மேலும் அலங்கரிக்கும் வகையில் இன்று ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உரையாற்றிய ராம்நாத் கோவிந்த், ‘மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள நான் நெடுந்தூரப் பயணத்துக்கு பின்னர் எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியை மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த நாட்டின் மக்களைத்தான் எனக்கு இருக்கும் பலமாக கருதுகிறேன்’ எனக் குறிப்பிட்டது இந்த நாட்டின் உயர்ந்த பதவிக்கு அவர் சூட்டியுள்ள மணிமகுடமாக கருத வேண்டும்.
    Next Story
    ×