search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓடிப் போனவர்கள் ஆட்சியமைக்க உரிமை கோர முடியாது: நாகலாந்து முதல்வர் தடாலடி
    X

    ஓடிப் போனவர்கள் ஆட்சியமைக்க உரிமை கோர முடியாது: நாகலாந்து முதல்வர் தடாலடி

    நாகலாந்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், மாநிலத்தில் இருந்து வெளியேறிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் அசாமில் இருந்துகொண்டு ஆட்சியமைக்க உரிமை கோர முடியாது என முதல்வர் கூறியுள்ளார்.
    கோகிமா:

    நாகலாந்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், மாநிலத்தில் இருந்து வெளியேறிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் அசாமில் இருந்துகொண்டு ஆட்சியமைக்க உரிமை கோர முடியாது என முதல்வர் கூறியுள்ளார்.

    வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் 2013-ம் ஆண்டு முதல் நாகாலாந்து மக்கள் முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது. நாகலாந்து மாநிலத்தில் முதல்வராக இருந்த நாகா மக்கள் முன்னணியின் ஜெலியாங், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நாகா இனமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்ததால், ஜெலியாங் பதவி விலக நேரிட்டது.

    பின்னர், புதிய முதல்வராக நாகா மக்கள் முன்னணியின் தலைவர் லெய்சீட்சு பிப்ரவரி மாதம் பதவியேற்றார். அவர் எம்.எல்.ஏ.வாக இல்லாததால், 6 மாதங்களுக்குள் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக தேர்வு செய்யப்படவேண்டும். இதற்காக அவரது மகன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவரது தொகுதியான வடக்கு அங்காமி-1 தொகுதியில் வரும் 29-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஜெலியாங் திடீரென ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். மொத்தம் உள்ள 59 எம்.எல்.ஏ.க்களில் தனக்கு 41 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறினார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அசாம் மாநிலத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கு முடிவு கட்டும் வகையில், முதலமைச்சர் லெய்சீட்சு வரும் 15-ம் தேதிக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார். ஆனால், இதற்கு மறுத்த அவர், இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றார். ஆனால், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவேண்டும் என்று கவர்னர் மீண்டும் உத்தரவிட்டார்.

    எனவே, இதற்கு தடை விதிக்கக்கோரி கவுகாத்தி ஐகோர்ட்டின் கோகிமா அமர்வில் முதலமைச்சர் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, சட்டமன்ற வாக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், திங்கட்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.

    இதுதொடர்பாக இன்று பேட்டி அளித்த முதலமைச்சர் லெய்சீட்சு, தனது தலைமையிலான அரசு வலுவாக உள்ளதாகவும், மாநிலத்திற்கு வெளியில் இருந்து கொண்டு பேசுவது மிகவும் அவமானம் என்றும் தெரிவித்தார்.

    ‘அரசாங்கம் வழக்கம்போல் இயல்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கட்சியில் உள்ள அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். எனது நண்பர்களில் பலர் வெளியே சென்றுவிட்டனர். அவர்கள் ஊதாரி பிள்ளைகள். அவர்கள் வீட்டையும் பெற்றோரையும் வீட்டு ஓடிப்போய்விட்டார்கள். அசாமில் இருந்து கொண்டு அவர்களால் ஆட்சியமைக்க உரிமை கோர முடியாது’ என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையே ஜெலியாங் தலைமையில் 44 எம்.எல்.ஏ.க்கள் இன்று கவர்னரை சந்தித்து பேசியுள்ளனர்.
    Next Story
    ×