search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வில் வெற்றி: வறுமையிலும் சாதித்த சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளியின் மகன்
    X

    நீட் தேர்வில் வெற்றி: வறுமையிலும் சாதித்த சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளியின் மகன்

    ஒடிசா மாநிலத்தில் வறுமையில் வாடினாலும் டாக்டராக வேண்டும் என்ற கனவை நிஜமாக்கும் வகையில், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநரின் மகன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியை சேர்ந்த ஷேக் அபுதலிப் அப்பகுதியில் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டி வருகிறார். இவரது குடும்பம் வறுமையில் வாடினாலும், ஷேக் அபுதலிப்பின் மகன் சஹாஜன் ஹொசைன் டாக்டராக வேண்டும் என்ற கனவை நனவாக்கும் வகையில் சிறுவயதிலிருந்தே விடாமுயற்சியுடன் படித்து வந்தார்.

    கேந்திரபாரா பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படித்த ஹொசைன், மேல்நிலைக் கல்வியில் இயற்பியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். தந்தையின் விருப்பப்படி டாக்டராக வேண்டும் என்ற நோக்கத்தோடு கடுமையாக முயற்சி செய்து படித்த ஹொசைன், சமீபத்தில் நடந்த நீட் நுழைவு தேர்வின், முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இதுதொடர்பாக சஹாஜன் கூறுகையில், "சிறு வயது முதல் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துள்ளேன். எனவே எனது பெற்றோரை நல்ல நிலைமையில் வாழ வைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.


    கடந்த 2 ஆண்டுகளாக டாக்டராக வேண்டும் என்பதற்காக விடாமுயற்சியுடன் பல மணி நேரம் படித்து வந்தேன். பிரபலமான கல்லூரிகளிலும், ஆங்கில மீடியத்திலும் படித்தால் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற தவறான எண்ணம் அனைத்து தரப்பினரிடமும் உள்ளது. முயன்று படித்தால் வெற்றி கிடைக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்" என தெரிவித்தார்.

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து அவரது தந்தை ஷேக் அபுதலிப் கூறுகையில், "எனது மூன்று மகன்களில் சஹாஜன் தான் இளையவன். நான் கேந்திரபாராவில் சைக்கிள் கடை வைத்திருந்தேன். 1999ல் ஏற்பட்ட புயலில் சிக்கி எனது கடை சூறையாடப்பட்டது. வேறு வழி இல்லாததால், ரிக்‌ஷா ஓட்ட தொடங்கினேன். ஆட்டோ ரிக்‌ஷா வருகைக்கு பிறகு ரிக்‌ஷாவுக்கு மவுசு குறைந்துவிட்டது. இப்போது நான் ரிக்‌ஷா ஓட்டுவதை விட்டு விட்டேன்.  சஹாஜன் நீட் தேர்வில் தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது" என குறிப்பிட்டார்.

    சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநரின் மகன் நீட் தேர்வில் சாதித்து மருத்துவக் கல்லூரியில் நுழைய உள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×