search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 200 பவுன் நகைகள்.
    X
    கொள்ளை கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 200 பவுன் நகைகள்.

    திருப்பதி அருகே கொள்ளை கும்பல் கைது: 200 பவுன் நகைகள் பறிமுதல்

    திருப்பதி அருகே கைதான 4 கொள்ளையர்களிடம் இருந்தும் 1 கிலோ 600 கிராம் எடையுள்ள சுமார் 200 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    திருப்பதி:

    திருப்பதி அருகே உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் முன்பு சந்தேகப்படும்படியாக 4 பேர் கும்பல் நேற்று மாலை சுற்றித் திரிந்தனர். அவர்களின் நடவடிக்கைகளை கவனித்த, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி போலீசார், 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரணையில், சித்தூர் அடுத்த பலமேனரை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (வயது 37), அனந்தபூர் குண்டக்கல் பகுதியை சேர்ந்த முஸ்லீம் (24), மதனப்பல்லியை சேர்ந்த ஹரிபாபு (35) மற்றும் மகாராஸ்டிரா பிவாண்டி பகுதியை சேர்ந்த இராணி (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் 4 பேரும் கொள்ளை கும்பல் என்றும், திருப்பதி போலீஸ் நிலையம் மற்றும் சித்தூர் புறநகர், திருச்சானூர், அலிப்பிரி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 48-க்கும் அதிகமான கொள்ளை வழக்குகளில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.

    தற்போது, திருச்சானூர் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையடிப்பதற்காக திட்டம் தீட்டி பதுங்கி இருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டனர். இதையடுத்து, பிடிபட்ட 4 கொள்ளையர்களிடம் இருந்தும் 1 கிலோ 600 கிராம் எடையுள்ள சுமார் 200 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மொத்தம் 48 தங்க செயின்கள் கொத்து, கொத்தாக சிக்கியது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து, ஷேக் அப்துல் காதர் உள்ளிட்ட 4 கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து திருப்பதி எஸ்.பி. ஜெயலட்சுமி, இன்று காலை நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். கொள்ளை கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 200 பவுன் நகைகள் மற்றும் வழக்குகள் குறித்து விவரித்தார்.

    மேலும், பிடிபட்ட கொள்ளையர்களின் கூட்டாளிகள் மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய நகை வியாபாரிகளை பிடிக்கவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.



    Next Story
    ×