search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல் புகார் எதிரொலி: லாலு மகன்களின் மந்திரி பதவியை பறிக்க நிதிஷ்குமார் ஆலோசனை
    X

    ஊழல் புகார் எதிரொலி: லாலு மகன்களின் மந்திரி பதவியை பறிக்க நிதிஷ்குமார் ஆலோசனை

    ஊழல் புகார் எதிரொலி காரணமாக லாலு மகன்களின் மந்திரி பதவியை பறிக்க பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பாட்னா:

    பீகாரில் 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

    இதில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நிதிஷ் குமார் முதல்-மந்திரி ஆனார். லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜ்பிரதாப் யாதவ், தேஜஷ்வி யாதவ் ஆகியோருக்கும் மந்திரி பதவி வழங்கப்பட்டது.



    இந்த நிலையில் லாலு பிரசாத் குடும்பத்தினர் ரூ.1000 கோடி அளவிற்கு முறைகேடுகளாக சொத்துக்களை சேர்த்து இருப்பதாகவும் அதில் லாலுவின் 2 மகன்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் பாரதிய ஜனதா புகார் கூறியது. பல நூறு கோடி சொத்துக்களை முறைகேடாக மாற்றி அதில் பெரு வணிக வளாகம் (மால்) கட்டி வருவதாகவும் புகார் கூறப்பட்டது.

    மேலும் தேஜ்பிரதாப் யாதவ் சட்ட விரோதமாக பெட்ரோல் பங்க் பெற்று இருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக பாரதிய ஜனதா தொடர்ந்து புகார் கூறியதையடுத்து, இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி நிதிஷ்குமார் பாரதிய ஜனதாவினர் தங்களிடம் ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் வழக்கு தொடரட்டும் என்று கூறினார்.

    அவருடைய இந்த பேச்சு லாலு பிரசாத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களுக்கு எதிராக பாரதிய ஜனதாவிற்கு நிதிஷ்குமார் வழி காட்டுவதாக லாலு கருதினார்.

    இதனால் நிதிஷ் குமாருக்கும், லாலுவுக்கும் இடையே மறைமுகமாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் லாலு தனது மகன் தேஜஷ்வியை முதல்-மந்திரியாக்க முயற்சிப்பதாக பேச்சு அடிபடுகிறது.



    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லாலுவின் 2 மகன்களையும் மந்திரி பதவியை விட்டு நீக்க நிதிஷ் குமார் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதாவின் முயற்சியின் காரணமாக லாலுவின் 2 மகன்கள் மீதும் விரைவில் வழக்குகள் தொடரப்படும். அப்போது அதை காரணம் காட்டி இருவரையும் நீக்கி விடலாம் என்று நிதிஷ்குமார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதுமட்டும் அல்லாமல் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி சார்பில் நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் வேட்பாளராக நிற்பதற்கு நான் விரும்பவில்லை என்று நிதிஷ் குமார் கூறியிருந்தாலும் அவருக்கும் பிரதமர் பதவி மீது ஆசை உள்ளது என்றே கூறப்படுகிறது.

    எனவே 3-வது அணி அமைந்தால் அவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம். அப்போது தான் ஊழலுக்கு எதிரானவன் என்பதை காட்டிக் கொள்ளும் வகையில் நிதிஷ்குமார் லாலுவின் மகன்கள் பதவியை பறிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    லாலு மகன்களின் பதவியை பறித்தால் லாலு கோபம் அடைந்து நிதிஷ் குமாருக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறலாம். இதனால் நிதிஷ்குமாரின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். இதை அவர் எப்படி சமாளிப்பார் என்று தெரியவில்லை.

    பீகாரில் மொத்தம் உள்ள 243 எம்.எல்.ஏ.க்களில் ராஷ்டீரிய ஜனதா தளத்துக்கு 80 பேரும், நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதா தளத்துக்கு 71 பேரும், காங்கிரசுக்கு 27 பேர் உள்ளனர். லாலு வாபஸ் பெற்றால் நிதிஷ்குமார் ஆட்சியை தொடருவது கடினம்.

    இங்கு பாரதிய ஜனதாவுக்கு 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். லாலு வெளியேறினால் நிதிஷ் குமாருக்கு ஆதரவு கொடுக்க பாரதிய ஜனதா தயாராக உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால். பாரதிய ஜனதாவை எதிர்க்க முடியாத நிலைக்கு நிதிஷ் குமார் தள்ளப்படுவார். இதனால் 3-வது அணி வேட்பாளராக அவர் நிற்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.
    Next Story
    ×