search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்படவில்லை: அன்புமணி கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
    X

    தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்படவில்லை: அன்புமணி கேள்விக்கு மத்திய மந்திரி பதில்

    தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் எந்தவொரு மீத்தேன் எரிவாயு திட்டமோ செயல்படுத்தப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்று எழுப்பியிருந்தார். அதாவது, “காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு, பாறை எரிவாயு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தும் யோசனை எதுவும் மத்திய அரசிடம் உள்ளதா?” என்று கேட்டிருந்தார்.

    அதற்கு மத்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், “தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் எந்தவொரு மீத்தேன் எரிவாயு திட்டமோ, பாறை எரிவாயு திட்டமோ செயல்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களில் இனி வரும் காலங்களில் பாறை எரிவாயு, பாறை எண்ணெய் உள்ளிட்ட எதையும் எடுக்கும் திட்டமில்லை” என்று கூறியுள்ளார்.



    அதேபோல், “காவிரிப் பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, “தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு பாசன மாவட்டங்களில் விவசாயத்துடன் சேர்த்து எரிவாயு திட்டங்கள் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.
    Next Story
    ×